எந்தெந்த தொழில்களை படிப்படியாக தொடங்கலாம் என அறிக்கை அனுப்புங்கள் என மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அவர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கூறியதாவது, ” அரசின் நிவாரண உதவிகள் கிடைக்காமல் விடுபட்டவர்களை கண்டறிந்து வழங்குங்கள். நோய்த்தடுப்பு பகுதிகளில் நகரும் கழிப்பறை வசதிகளை மேற்கொள்ள வேண்டும். விளைபொருட்களை சந்தைக்கு கொண்டு செல்ல விவசாயிகளுக்கு தடை இருக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளார். 100 நாள் வேலைத்திட்டம், சமூக விலகலுடன் முகக் கவசம் அணிந்து நடைபெறுவதை உறுதி செய்யுங்கள் என அறிவுரை வழங்கியுள்ளார்.
மே மாதத்திற்கான ரேஷன் டோக்கன்களை நாள், நேரம் குறித்து வழங்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும், நடமாடும் சோதனை வாகனங்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும், சந்தேகப்படுபவர்களின் வீட்டிற்கே சென்று சோதனை மேற்கொள்ளப்படும் எனவும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, ” சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 6 மண்டலங்களில் களப்பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதேபோன்ற சிறப்புக்குழுக்கள் கோவை, மதுரை, திருப்பூர் மற்றும் சேலம் மாநகராட்சிகளிலும் அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
அதேபோல, ஒவ்வொரு மாவட்டத்திலும் நோய் பரவல், தற்போதைய நிலை குறித்து ஆட்சியர்கள் அறிக்கை அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். வெளிமாநில தொழிலாளர்களின் மாநில வாரியாக எண்ணிக்கையை கணக்கெடுத்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். வெளிமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள இடங்களில் அரசு அறிவித்த நிவாரண பொருட்கள் சென்று சேர்வதை உறுதி செய்ய வேண்டும்” என்ற அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
மேலும், தனிமைப்படுத்தப்படும் பகுதிகளில் மக்களுக்கு சானிடைசர்கள், முகக்கவசம் போன்றவை வழங்கப்படும் என்றும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் சூரணம் போன்ற மருந்துகளை வழங்குவது உறுதி செய்யப்படும் என தெரிவித்தார். சென்னை மாநகரில் தொற்றுநோய் உள்ளோரின் தொடர்புடையோரை கண்டறியும் பணிகள் வலுப்படுத்தப்படும் எனவும் கூறியுள்ளார். எந்த தொடர்பில்லாமலும் நோய் தொற்று ஏற்படுகிறதா? என்பதை ஆராயவும், விரைவாக கண்டறியவும் சிறப்பு குழு அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார். அதேபோல, நோய் கட்டுப்பாடு பகுதிகளில் ஒவ்வொரு வீட்டிற்கு 250 கிராம் கிருமி நாசினி பவுடர் வழங்கப்படும் என முதல்வர் கூறியுள்ளார்.