மற்ற நாடுகளை விட அமெரிக்காதான் கொரோனா பரிசோதனையை விரைவாக செய்கிறது என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். விரைவாக பரிசோதிப்பதால் தான் பாதிப்பு 10 லட்சத்தை தாண்டியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா போல் மற்ற நாடுகள் பரிசோதிக்காததால் தான் பாதிப்பு குறைவாக இருப்பது போல் காட்டுகிறது என அதிபர் குற்றம் சாட்டியுள்ளார். உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 லட்சத்து 38 ஆயிரத்து 369 ஆக அதிகரித்துள்ளது. பல்வேறு நாடுகளில் கொரோனவால் பாதிக்கப்பட்டு 2 லட்சத்து 17 ஆயிரத்து 983 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் உலகளவில் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 9 லட்சத்து 55 ஆயிரத்து 811 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பாதிப்பு அமெரிக்கா, ஸ்பெயின், இந்தியா உள்ளிட்ட 180 நாடுகளுக்கும் மேல் பரவியது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. உலக நாடுகளில் அதிகம் பாதித்த அமெரிக்காவில் மட்டும் 10 லட்சத்து 35 ஆயிரத்து 765 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59,266 ஆக அதிகரித்துள்ளது. இங்கு கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 42 ஆயிரத்து 238 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், உலகநாடுகளில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் இருப்பதற்கான விளக்கத்தை அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.