Categories
சினிமா தமிழ் சினிமா பல்சுவை

யார் இந்த அஜித்? ”சிலிர்க்க வைக்கும் வரலாறு” பிறந்தநாள் ஸ்பெஷல் …!!

மே 1ஆம் தேதி நடிகர் அஜித்தின் பிறந்தநாள் கொண்டாடப்பட இருப்பதால் இந்த சிறப்பு செய்தி தொகுப்பு வழங்கப்படுள்ளது.

”அஜித்” இந்த மூன்றெழுத்து பெயர் திரையில் தோன்றினால் ரசிகர்களின் கரகோஷம் விண்ணை பிளக்கும். இவரது முகத்தை பார்ப்பதற்காகவே திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் அலை மோதும். இருபத்தைந்து ஆண்டுகள், 58 படங்களில், இந்த தென்னிந்திய சினிமாவில் அசைக்க முடியாத சக்தியாக உருவாகி இருக்கிறார். எவரும் அவ்வளவு எளிதில் எட்ட முடியாத ஒரு உயரத்தில், சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் அஜித் என்னும் ஆளுமைக்கு, இந்த வெற்றி அவ்வளவு எளிதில் கிடைத்துவிடவில்லை.

முன்னேறிய பாதை:

1971 ஆம் ஆண்டு, ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் பிறந்த அஜித். வளர்ந்தது முழுவதும் சென்னையில் தான். இளம் வயது முதலே கூட்டத்தில் ஒருவராக இருப்பது அஜித்திற்கு பிடிக்காது. எல்லோரும் நம் பெயரை உச்சரிக்கும் படி ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற வெறி அந்த இளைஞரிடம் இருந்தது. தனது பள்ளிப்படிப்பை பாதியிலேயே கைவிட்டு, அஜித் பைக் மெக்கானிக் ஆக பணியில் சேர்ந்தார்.

பைக், கார் ஓட்டுவதில் அதிக ஆர்வம் கொண்டார். இனி பைக் பந்தயம் தான் தனது தொழில் என்று தேர்ந்தெடுத்தார். ஆனால் பைக் ரேஸில் கலந்து கொள்ள பணம் தேவை என்பதை உணர்ந்த அவர், அதற்காக தனது தந்தையின் நண்பர் நடத்திய ஏற்றுமதி நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலைக்கு சேர்ந்தார். இதற்கிடையே சென்னிமலை ஈரோடு நகரங்களிலிருந்து பெட் சீட் வாங்கி வந்து சென்னையில் விற்கும் சொந்த பிசினஸ் செய்து பணம் திரட்டி வந்தார். ஆனால் இது மட்டுமே போதாது என்ற நிலையை எட்டிய போது. அவருடைய நண்பர்கள் குழு அவருக்கு ஒரு ஆலோசனை வழங்கியது.

சினிமாவில் அடியெடுத்து வைத்த நேரம்:

வசீகரமான தோற்றம், வித்தியாசமான குரலுடன் பார்ப்பதற்கு ஹீரோ போலவே இருப்பதால். நீ ஏன் சினிமாவில் சேரக்கூடாது என நண்பர்கள் கொடுத்த ஆலோசனைக்கு செவி சாய்த்த அஜித் 1980களின் இறுதியில் மாடலிங் துறையில் கால் பதித்தார். விளம்பரங்கள், தூர்தர்ஷன் தயாரித்த குறும் படங்கள் என மெல்ல மெல்ல மாடலிங் துறையில் கவனம் ஈர்க்க தொடங்கிய அவருக்கு 1993இல் தெலுங்கில் வெளியான பிரேம புஸ்தகம் வெள்ளித்திரையில் அறிமுகப் படமாக அமைந்தது. இதே காலகட்டத்தில் தமிழில் அமராவதி படத்திற்காக இயக்குனர் செல்வா ஒரு நாயகனை தேடிக் கொண்டிருந்தார்.

அப்போது அஜித்தின்  புகைப்படத்தை பார்த்து அவரை அமராவதியின் நாயகனாக ஆக்கினார். அமராவதி படத்தில் பாடல்கள் பேசப்பட்ட அளவிற்கு, படம் சோபிக்கவில்லை எனினும், துடிப்பான இளைஞனாக மக்கள் மனம் கவர்ந்த அஜித்திற்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்தன. ஒரு கட்டத்தில் அவர் முன்பு ஒரு மெல்லிசான கோடு விரிந்தது. ஒரு பக்கம் பைக் ரேஸ், இன்னொரு பக்கம் சினிமா இதில் எதை தேர்வு செய்வது என்ற கேள்வி எழுந்த பொழுது அவர் தேர்ந்தெடுத்தது சினிமாவை.

சினிமாவில் அறிமுகமாகி இரண்டு ஆண்டுகளாகியும் தான் எதிர்பார்த்த புகழ் வெளிச்சம் அஜித்திற்கு கிடைக்கவில்லை. இவருடன் விளம்பரப்படங்களில் நடித்தவர்கள் அடுத்தடுத்து பல முன்னணி விளம்பர படங்களில் நடித்து முன்னேறிக் கொண்டே போக, சினிமாவை நம்பி வந்த அஜித்தின் நிலையோ கேள்விக்குறியானது. அந்த சமயத்தில் விளம்பர துறையைச் சேர்ந்த அஜித்தின் நண்பர் ஒருவர் தான் இயக்கப்போகும் தொலைக்காட்சித் தொடரில் நடிக்கும் வாய்ப்பை வழங்கினார். மாதத்திற்கு 50 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கும் என்ற உற்சாகம் அளித்தார்.

அவரின் திறமைக்கு கிடைத்த முதல் வெற்றி:

ஆனால் இனி சினிமாதான் என்று, லட்சிய கனவுகளோடு திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர்க்கு அதிலிருந்து பின்வாங்க மனமில்லை. இதே சினிமாவில் நிச்சயம் ஒருநாள் சாதித்துக் காட்டுவேன் என வைராக்கியத்தோடு போராடிய அஜித்திற்கு அடுத்து ஆசை விசிட்டிங் கார்டாக மாறிவிட்டது. மணி ரத்னம் தயாரிப்பில் வெளியான மே மாதம் தான் அஜீத் ஹீரோவாக அறிமுகமாக இருந்த படம்.

ஆனால் அந்த சமயத்தில் அவர் பைக் ரேஸில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால், அதில் நடிக்க முடியாமல் போனது. பின்னர் மணிரத்னத்திடம் தான் வாங்கிய அட்வான்ஸ் இருக்க அவர் நடித்துக் கொடுத்த படம் தான் ஆசை. ஆனால் அந்த ஆசை தான் அவரை புகழின் வெளிச்சத்தில் எடுத்து வந்தது. ஆசை படத்தில்  இடம்பெற்ற “கொஞ்ச நால் பொறு  தலைவா” பாடல் தான் அன்பின் அடையாளமாக இருந்தது.

எந்தப் பக்கம் திரும்பினாலும் ஆசை நாயகன் என ரசிகர்கள் கூட்டம் இவரை பின்தொடரவும் தொடங்கியது. ஆனால் ஆசை படத்தின் வெற்றியில் அஜித்திற்கு முழு திருப்தி இல்லை, ஏன் என்றால் பிரகாஷ்ராஜ் நடிப்பும், தேவாவின் இசையும் தான் அப்படத்தின் வெற்றிக்கு காரணம் என விமர்சனம் எழுந்ததையும் ஏற்றுக்கொண்டார். தன் பெயர் சொல்லும்படி ஒரு வெற்றியை கொடுக்க வேண்டும் என நினைத்தார்.

காதல் மன்னன்:

அப்படியான தருணத்தில் வெளிவந்து அவரது பெயரையே மாற்றி அமைத்த படம் தான் காதல் கோட்டை. பார்க்காமலேயே காதல் என்னும் பரிசோதனை முயற்சியில் காதல் கோட்டை படத்தின் கதை உருவாகியிருந்தது. ஆரம்ப காலகட்டங்களில் இது போன்ற படங்களில் நடிக்க எந்த ஒரு ஹீரோவும் தயக்கம் காட்டுவார்கள். ஆனால் ஒரு கணம் கூட யோசிக்காமல் காதல் கோட்டை படத்தில் நடிக்க சம்மதித்தார். அதன் கதை மீது அவர் வைத்த நம்பிக்கை எப்படி அவர் எதிர்பார்த்தது போலவே காதல் கோட்டை வெளியாகி மாபெரும் வெற்றியை சந்தித்தது.

அஜித்தின் பெயரை பட்டிதொட்டி வரை கொண்டு போய் சேர்த்தது. குறிப்பாக ரயில் நிலையத்தில் காதலர்கள் இணையும் அந்த கிளைமாக்ஸ் காட்சி தியேட்டருக்குள் ஆடியன்ஸை வரவழைத்து படத்தை வெள்ளிவிழா படம் ஆக மாற்றியது. ஆசை, காதல் கோட்டை என கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி அஜித்திற்கு காதல் மன்னன் அடுத்தக்கட்ட பாய்ச்சல் கொடுத்தது.  சவால் விடுவது அதில் வெற்றி பெறுவது என காதல் மன்னனின் அஜித்தின் கதாபாத்திரம், அவரது ரியல் லைப் உடன் நிறையவே பொருந்தியுள்ளது.

மேலும் காதல் கோட்டை, காதல் மன்னன் என தொடர்ந்து காதல் படங்களில் நடித்து வெற்றி பெற்றதால், ஜெமினி கணேசன், கமலுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் புதிய காதல் மன்னனாக அஜித் உருவெடுத்தார். குறிப்பாக அஜித்திற்கு ஏராளமான பெண் ரசிகைகள் உருவாகத் தொடங்கிய காலகட்டம் அது.  இவரை போலவே மாப்பிள்ளை வேண்டும் என்று பேச்சும் வழக்கத்திற்கு வந்தது.

வாலி படத்தின் வெற்றி:

இதை தொடர்ந்து ஒரு இரட்டை வேடத்தில் நடிக்க வேண்டும் என்பது அவரது இந்த விருப்பம். அப்படி நிறைவேறிய படம் தான் வாலி. வசந்தம், ஆசை படத்தில் உதவி இயக்குனராக இருந்த எஸ்.ஜே.சூர்யாவின் திறமையை கண்டறிந்து அஜித் அவரை அழைத்து தனக்காக ஒரு இரட்டை வேடப் கதையை தயார் செய்ய சொன்னார். அது வழக்கமான படமாக இல்லாமல் வித்தியாசமான படமாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

விளையாட்டு குணம் கொண்ட தம்பி, அவனது மனைவியை அடைய நினைக்கும் வாய் பேச முடியாத அண்ணன் என்று வித்தியாசமாக அமைந்து இருந்த வாலி படத்தில், இரட்டை வேட கதாபாத்திரம் அதுவரை தமிழ் சினிமா கண்டிராத ஒன்று. அதில் இரண்டு மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி தன்னை ஒரு சிறந்த நடிகராக முன்னிறுத்தி அஜித் வாலி வெளியான சமயத்தில் தமிழகத்தில் எந்த மூலைக்குச் சென்றாலும் அஜித்தின் நடிப்பு பேசும் பொருளாக இருந்தது.

இயக்குனர்களுக்கு அளித்த வாய்ப்பு:

இந்த நடிகருக்கு இப்படி ஒரு திறமையா என்று விமர்சகர்கள், அவரை கொண்டாடி உயர்ந்தார்கள். இன்னொரு பக்கம் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமும் உருவாகத் தொடங்கியது. அதன் பின்பு வெளியான அமர்க்களம், முகவரி படங்கள் அவரின் இமேஜை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது. திறமையுடன் வாய்ப்புக்காக போராடும் உதவி இயக்குனர்களை கண்டறிவதில் நிகர் அவரே. அந்த வகையில் சரண், எஸ்.ஜே.சூர்யா அடுத்தபடியாக இவர் அறிமுகம் செய்துவைத்த இன்னொரு முக்கியமான இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.

இன்று இந்திய சினிமாவில் மோஸ்ட் வாண்டட் இயக்குனராக இருக்கும் ஏ.ஆர்.முருகதாஸை ஆரம்பத்தில் இயக்குனர் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். பார்ப்பதற்கு சின்னப் பையனை போன்ற தோற்றம் இருந்தாலும், அவருடைய திறமையை மட்டுமே நம்பி தீனாவின் மூலம் அவரை இயக்குனராக அழகு பார்த்தவர் அஜீத். அதற்குப் பரிகாரமாக ஷாருக்கான், சல்மான்கான் என இந்திய அளவில் மிக முக்கியமான நடிகர்கள், இன்று ஏ.ஆர்.முருகதாஸ் இன் கால்ஷீட்டுக்காக காத்திருந்தாலும், அஜித் கூப்பிட்டால் நான் எடுத்துக் கொண்டிருக்கும் படத்தைக்கூட பாதியிலேயே விட்டுவிட்டு ஓடுவேன் என கூறி அதன் அதீத அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார் முருகதாஸ்.

தல அஜித்தாக மாறிய தருணம்:

2001 ஆம் ஆண்டு வெளியான அஜித்தின் கேரியரில் இன்னொரு வெற்றிப் படமாக மட்டும் அமையவில்லை. அதுவரை அல்டிமேட் ஸ்டார் ஆக இருந்தவரை ஒரு தலையாக மாற்றிய படமும் அதுதான். தீனா படத்தின் வெற்றிக்கு பிறகு அஜித் ரசிகர் செல்வாக்கு பன் மடங்கு உயர தொடங்கியது. அடுத்து வெளியான சிட்டிசன் அதை மீடியா வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. சிட்டிசன் வெளியான நாளில் சென்னை வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவிற்கு ரசிகர்களின் கூட்டம் அலைமோதியது. அந்த நாளை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது.

அது வரை ரஜினி, கமலுக்கு மட்டுமே அப்படி ஒரு கூட்டத்தைப் பார்த்து இருந்த தமிழ் சினிமா அஜீத்தை அடுத்த வசூல் சக்கரவர்த்தியாக ஏற்றுக்கொண்டது. கூடவே எண்ணிலடங்கா ரசிகர்களின் பலத்தால் தமிழகத்தில் பொதுமக்கள் நாயகனாக உருவெடுத்தார் அஜித். தொடர் வெற்றிகளால் உச்சத்தை எட்டிய அஜித்தின் திரைப்பயணம் புது நூற்றாண்டின் தொடக்கத்தில் பெரும் பின்னடைவை சந்தித்தார்.

தோல்வி கண்ட போதிலும் குறையாத ரசிகர்கள்:

2003 முதல் 2006 வரையிலான காலகட்டம் அவருக்கும், அவருடைய ரசிகர்களுக்கும் சோதனை காலம் என்றே சொல்ல வேண்டும். பரமசிவன்,ஜி, திருப்பதி என அந்த காலகட்டத்தில் அஜித் நடித்த படங்கள் அடுத்தடுத்து வெளியாக தோல்வி அடைந்து அவருக்கும், அவருடைய ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது. இந்த சமயத்தில் அஜித் கார் ரேஸில் கூடுதல் கவனம் செலுத்த தொடங்கினார். சினிமாவிற்கு அடுத்தபடியாக அவர் அதிகம் நேசிக்கும் விஷயம் ரேஸிங்.

உடனடியாக கார் பந்தயத்தில் பங்கேற்ற அவர் 2002 ஆம் ஆண்டு இந்திய அளவில் நடைபெற்ற கார் மாருதி சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அளவில் நான்காம் இடம் பிடித்து அசத்தினார். அவர் கார் ரெஸிங்கில் அதிக கவனம் செலுத்துவதால் தான் அவருடைய படங்கள் தோல்வி அடைந்ததாக விமர்சனங்களும் எழ தொடங்கியது. கூடவே சண்டை காட்சிகளில் டூப் போடாமல் நடிப்பது, ரேஸில் கலந்து கொண்டு நேர்ந்த விபத்து உட்பட உடல் முழுவதும் 23 இடங்களில் ஆபரேஷன் செய்து கொண்டார்.

வீழ்ந்த போதிலும் எழுந்தவர்:

சிகிச்சைக்காக ஓய்வு பெற்ற போது அவர் உடல் எடையும் கூடியது. ஆரம்பத்தில் எந்த ஒரு தோற்றம் தன்னை மக்களிடம் கொண்டு போய் சேர்த்ததோ, அது முற்றிலும் மறைந்து குண்டான ஒரு உடற்கட்டுக்கு மாறி விட்டார். இனி அஜித் அவ்வளவுதான், முன்பு போல் அவரால் வெற்றிப் படங்களைக் கொடுக்க முடியாது என வெளிப்படையாகவே விமர்சனங்கள் எழுந்தது. ஆனால் இவை எதுவும் அஜித்தின் செவியில் விழவில்லை.

ஒவ்வொரு முறை விழும்போதும் பீனிக்ஸ் பறவையாய் மீண்டு வந்து, முன்பு இருந்ததை விட பெரிய ஹிட் கொடுப்பது அஜித்தின் ஸ்டைல். அந்த வகையில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எப்படி போனாரோ, அப்படியே திரும்பி வந்து அவர் கொடுத்த படம் பில்லா. இந்த இடைப்பட்ட காலத்தில் அஜித்தின் ரசிகர் பலம் துளியும் குறையவில்லை. எத்தனை தோல்விப்படங்கள் கொடுத்தாலும், அவரது ரசிகர் படை அசைக்க முடியாத சக்தியாக இருந்தது.

உடல் வலியுடன்,  மன வலியுடனும் போராடிய போது அவரது முதுகெலும்பாய் இருந்தது, அவரது ரசிகர்கள் மட்டுமே. தன் ரசிகர்களின் ஐந்தாண்டுகால காத்திருப்புக்கு அவர் கொடுத்த ஸ்பெஷல் ட்ரீட் தான் பில்லா. ரஜினியின் படத்தை ரீமேக் செய்யப் போகிறார் என்பதும் ஒட்டுமொத்த ஹோலிவுட்டும் ஆச்சரியத்தில் பார்த்தது. ஏற்கனவே வெற்றி பெற்ற படத்தை ரீமேக் செய்தால், யார் பார்ப்பார்கள் என கேள்வி எழுந்தது. ஆனால் பில்லாவில் அஜீத் செய்த மாற்றம், தமிழ் சினிமாவின் புது டிரென்ட் செட்டராக அமைந்தது.

பில்லாவின் வெற்றி:

கோட் சூட், கூலிங்கிளாஸ் மேக்கிங் என ஒரு பாலிவுட் படத்தை தமிழ் டப்பிங்கில் பார்த்த உணர்வை தமிழ் ரசிகர்களுக்கு பில்லா கொடுத்தது ஆகும். இதன் மாபெரும் வெற்றியின் மூலம் தான் விட்டுச்சென்ற சிம்மாசனத்தில் மீண்டும் ஒய்யாரமாக ஏறி அமர்ந்தார் அஜித். அவர் எப்போது எந்த முடிவையும் எடுப்பார் என்பதை யாராலும் கணிக்க முடியாது. பில்லா படத்தில் அதிரிபுதிரி வெற்றிக்கு பிறகு அவருடைய ரசிகர்கள் மீண்டும் ஆக்டிவாக செயல்படத் தொடங்கினார்கள்.

2010ஆம் ஆண்டிற்கு பிறகு இணையத்தில் அசுர வளர்ச்சியை தமிழகம் கண்டது. பேஸ்புக் போன்ற சமூகவலைதளங்கள் எல்லோருக்கும் அறிமுகமான காலகட்டத்தில் அதிலும் அஜித்தின் வீச்சு அதிக அளவு இருந்தது. தென்னிந்திய அளவில் அதிக ரசிகர்கள் செல்வாக்கு கொண்ட ஹீரோ யார் என்று எப்போது வாக்கெடுப்பு நடந்தாலும், அதில் அஜித்தின் பெயரே முன்னணியில் இருக்கும். அப்படியான தருணத்தில் நாடெங்கும் பிரிந்து கிடக்கும் தன்னுடைய ரசிகர் படையைக் கொண்ட மன்றங்களை கலைப்பதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார் அஜீத்.

தன்னுடைய ரசிகர் மன்றம் என்ற பெயரில் போஸ்டர் ஒட்டி, பேனர் வைத்து தங்கள் எதிர்காலத்தை வீணடிப்பதை விரும்பவில்லை என்றும், அதற்கு விளக்கம் கொடுத்தார். இனி தன் படங்களை புரமோட் செய்ய மாட்டேன் என்றும் அறிவித்தார். பொது விழாக்களில் கலந்து கொள்வதையும் நிறுத்திக்கொண்டார். ஒரு பக்கம் அஜித்தின் இந்த முடிவு அவருடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தாலும், இன்னொரு பக்கம் அஜித்தின் தனிமனிதனுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு மேலும் கூடியது.

ரசிகர் மன்றங்கள் இல்லாமல் ஒரு முன்னணி ஹீரோவின் படம் வெளியானால் எப்படி ஓப்பனிங் கிடைக்கும் என திரை வட்டாரத்தில் பேசத்தொடங்கினார்கள். ஆனால் நடந்தது என்னவோ வேறு…. மன்றங்களை கலைத்து பேட்டி கொடுப்பதை நிறுத்திய பிறகுதான் அவர் படங்களுக்கு அதுவரை இல்லாத அளவிற்கு வேற லெவல் ஓபனிங் கிடைக்கத் தொடங்கியது. இனி அஜித் என்னும் மனிதனை திரையில் மட்டுமே பார்க்க முடியும் என்ற சூழல் உருவானதால், ஒவ்வொரு முறை அவர் படங்கள் வெளியாகும் போதும், திரையரங்குகளை நோக்கி ரசிகர்களின் கூட்டம் படை எடுக்கத் தொடங்கியது.

தமிழகத்தின் மூலை முடுக்குகளில் இருக்கும் திரையரங்குகள் கூட திருவிழாக் கோலம் கண்டு பிடிக்க, அவரது ரசிகர்கள் சொல்லும் காரணங்களில் முதன்மையானது அவருடைய தன்னம்பிக்கையும், துணிச்சலும் தான். பவித்ரா பட சமயத்தில் பைக் ரேஸில் விபத்து ஏற்பட்டு முதுகு தண்டில் அடிபட்ட போதும், வீல் சேரில் வந்து படப்பிடிப்பில் கலந்துகொண்டு ஆச்சரியப்படுத்தினார். தொடர் தோல்விகள் கொடுத்த போதிலும், அடுத்த சூப்பர் ஸ்டார் நான்தான் என பகிரங்கமாக பத்திரிக்கைகளில் அறிவித்தார்.

விஜய், அஜித் ரசிகர்களின் மோதல் உச்சத்தை எட்டிய காலத்தில் பெண்மை கலந்த கதாபாத்திரத்தில் நடித்து எல்லோரையும் பிரமிக்க வைத்தார். இதற்கெல்லாம் உச்சமாக கலைஞர் பாராட்டு விழாவில் தன்னை வற்புறுத்தி வரச் சொன்னதாக அஜீத் பேசியது அந்நாளில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பலருக்கும் அஜித் மீது கடும் கோபத்தை உண்டாக்கியது. ஆனால் அஜீத்தின் இந்த துணிச்சலை அவருடைய ரசிகர்களுக்கு இன்னும் பிடித்துப்போனது .

அஜித்தின் பேச்சுக்கு, அந்நாளைய முதல்வர் அருகிலேயே அமர்ந்து இருந்தாலும், எழுந்து நின்று கைத்தட்டி ஆதரவு கொடுத்தார் ரஜினி. அஜித்தை பார்த்து பொறாமை படுவதாக ஒரு விழா மேடையில் பேசினார் கமல். இவர்கள் போக சிம்பு, ஆர்யா, அனிருத் என அஜித்தின் ரசிகர்கள் பிரபலங்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகும் அளவிற்கு பிரபலங்களை ரசிகர்களாக கொண்ட வேறு ஒரு தமிழ் நடிகர் இல்லை என்பது அசைக்கமுடியாத உண்மை. ஆரம்பம் முதல் தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் எந்த ஒரு விஷயமும் தமிழ் சினிமாவில் ட்ரென்ட் ஆக மாறி போகும்.

90களில் கிளீன் ஷேவ் செய்த முகத்துடன் ஒட்டுமொத்த தமிழ் ஹீரோக்களும் வலம் வந்து கொண்டிருந்த நேரத்தில், தாடியுடன் அஜித் நடித்தது அந்நாளில் புது ட்ரெண்ட் ஆனது. நரைத்த முடியை டை அடித்து ஹீரோக்கள் நடை போட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில், சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் அவர் தோன்றியது பின்னாளில் இந்தியா முழுவதும் ட்ரெண்டானது. அவ்வளவு ஏன் இணையத்தில் யாருடைய ட்ரெய்லர் அதிக வியூஸ் பெற்றது என்றால் நம்பர்1 போட்டிகளையும் துவக்கி வைத்தது அஜித் படங்கள் தான்.

இவருடைய எண்ணை அறிந்தால் படத்தின் டீசர் தான் அதிவிரைவில் மில்லியனில் வியூஸ் பெற்று இந்த சாதனை போட்டியை துவக்கி வைத்ததே ஆகும். இளம் வயது முதலே தன் மனம் எதைச் சொல்கிறதோ, அதை பின்தொடர்வது அஜீத்தின் வழக்கம். நடிப்பில் பிஸியாக இருந்தபோதிலும், ரேசிங் செய்தார். போட்டோகிராபியில் ஆர்வம் வந்ததும் அதை முறைப்படி கற்றுத் தேர்ச்சி பெற்றார்.

படப்பிடிப்பில் சக நடிகர்களுக்கு பிரியாணி சமைத்து தன் கையாலேயே பரிமாறுவார். போரடித்தால் ஜாலியாக தனது காஸ்ட்லி பைக் எடுத்துக்கொண்டு சென்னை வீதிகளில் உலா வருவார். சிறிய ரக ஹெலிகாப்டரை பிரித்து கலைத்து மீண்டும் அசல் செய்து அதைப் பறக்க விடுவார். தனக்கு எது பிடிக்கிறதோ அதை செய்ய அவர் ஒருபோதும் தயங்கியதில்லை.

மனைவி ஷாலினி:

ரசிகர்களுக்கு அடுத்த படியாக அஜித்தின் வாழ்வில் அவருக்கு பக்கபலமாக இருக்கும் இன்னொரு நபர் அவருடைய காதல் மனைவி ஷாலினி. அமர்க்களம் சமயத்தில் சக நடிகையான ஷாலினியை காதலித்து மணம் முடித்தார். விபத்தில் சிக்கி அஜித்தின் கேரியர் கேள்விக்குறியான போது அவர் மீண்டு வர அவருக்கு பக்கபலமாக இருந்தவர் ஷாலினி. இந்த தம்பதிக்கு அனுஷ்கா என்ற மகளும் தேவ் என்ற மகனும் உள்ளனர். இதில் ஆட்விக் பிறந்தபோது குட்டி தல என்ற ஹேஸ்டேக் உலக அளவில் ட்ரண்ட் செய்து அவரது ரசிகர்கள் ஆரவாரம் செய்தார்கள்.

குடும்பத்துடன் நேரம் செலவிடுவது:

சூட்டிங் தவிர்த்து குடும்பத்துடன் நேரம் செலவிடுவதை அதிகம் விரும்புவார். இந்திய அளவில் கவனிக்கப்படும் ஒரு ஹீரோ தன்னுடைய மகளுக்காக பள்ளி விழாவில் டயர் ஓட்டி விளையாடிய காட்சி இணையத்தில் எல்லோராலும் பார்க்கப்பட்டது. மற்ற நடிகர்களைப் போல நடிப்பு என்பது ஒரு பேஷன் கிடையாது. நடிகராக வேண்டும் என ஆரம்பத்தில் அவர் கற்பனை செய்ததும் கிடையாது. எதையாவது சாதிக்க வேண்டும் என நினைத்தவருக்கு அதை நிறைவேற்ற ஆயுதமாய் கிடைத்ததுதான் சினிமா.

அதை கெட்டியாக பிடித்துக் கொண்டவர், தனது விடா முயற்சியால் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தையே உருவாக்கி இன்று தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக மாறி இருக்கிறார். இன்று மட்டுமல்ல தமிழ் சினிமா இருக்கும் வரை அதில் அஜித் என்னும் பெயர் ஒலித்துக்கொண்டே இருக்கும்………!

Categories

Tech |