Categories
மாநில செய்திகள்

சுங்கச்சாவடியில் அதிக கட்டணம் வசூல்… நெடுஞ்சாலை துறையை அணுகுங்க… ஐகோர்ட் உத்தரவு

கொரோனா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு முடியும் வரை சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க தடை கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

வழக்கு விவரம்:
நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க மார்ச் 25 முதல் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் சுங்கச்சாவடிகளில் கட்டணங்கள் வசூலிக்கக்கூடாது என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன் பிறகு, கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கை மேலும் 19 நாட்களுக்கு நீட்டித்து, அதாவது மே 3ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டது.

இந்த காலத்தில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுவதாகவும் மத்திய அரசு உத்தரவிட்டது. சுங்கச்சாவடிகளில் கட்டணங்கள் வசூலிக்கப்படலாம் எனவும், அதேபோல கூடுதல் கட்டணங்கள் வசூலிக்க அனுமதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயநீதிமன்றத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த முனி கிருஷ்ணன் என்பவர் ஒரு பொதுநல வழக்கை தொடர்ந்தார்.

அதில், ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள காலகட்டத்தில் சுங்கச்சாவடிகளில் அதிக அளவில் கட்டணங்கள் வசூலிப்பதாவும், ஊரடங்கு முடியும் வரை சாவடிகளில் கட்டணங்கள் வசூலிக்க தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. கட்டணங்களை அதிகமாக வசூலித்தால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

வழக்கு தள்ளுபடி:
இந்த மனு இன்று நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு காணொலி மூலம் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது இந்திய நெடுஞ்சாலைத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ” சுங்கக்கட்டணங்களை வசூலிக்க சட்டம் அனுமதிப்பதாகவும், சாலைகளை முறையாக பராமரிக்க வேண்டியது நெடுஞ்சாலைத்துறையின் கடமை எனவும் தெரிவித்தார்.

மேலும் இது சம்பந்தமாக மனுதாரர் கோரிக்கை மனு அளித்தால் அதனை பரிசீலிப்பதாகவும்” மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் மனுத்தாரர் தரப்பில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு கோரிக்கை மனு அளிக்க அறிவுறுத்தினர். அந்த மனுவை விரைந்து பரிசீலிக்கும்படி நெடுஞ்சாலை துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

Categories

Tech |