கொரோனாவுக்கு எதிரான போரில் ஒவ்வொரு குடிமகனும் வீரர்களை போல போராடுகிறார்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார். மன் கீ பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, அரசின் ஒவ்வொரு துறைகளும் 24 மணிநேரமும் மக்களுக்கு உதவுவதற்காக செயல்பட்டு வருகிறது என்றும் அரசும், மக்களும் சேர்ந்து கொரோனாவுக்கு எதிராக போராடி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு காலத்தில் நாட்டின் மூலை முடுக்கில் உள்ள மக்கள் மற்றவர்களுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளனர். கொரோனாவுக்கு எதிரான மக்களின் போராட்டம், மக்களால் நடத்தப்படும் போர் என்றும் கொரோனாவுக்கு எதிராக மக்களால் நடத்தப்படும் போர் நிச்சயம் வெல்லும் என நம்புகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியர்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ளனர். பொதுமக்களின் ஒத்துழைப்புடன் அரசு நிர்வாகங்கள் இணைந்து கொரோனாவை எதிர்த்து போரிட்டு வருகின்றன என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 26 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாடு முழுவதும் 26,496 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 1,990 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது மற்றும் 49 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு மொத்த எண்ணிக்கை 824 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 5,804 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.