Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சக குழு ஆய்வு!

சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சக குழு ஆய்வு செய்து வருகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்த சென்னை, அகமதாபாத், சூரத், ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சக குழு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது மத்திய உள்துறை இணைச் செயலாளர் நேற்று முன்தினம் கூறியிருந்தார். அதன்படி சென்னை வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சக குழு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

அவர்களுடன் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், வருவாய்த்துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, காவல் ஆணையர் விஸ்வநாதன் ஆகியோர் உடனிருந்தனர். முதலில் சென்னை ஆழ்வார்பேட்டையில் வடமாநில தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள மாநகராட்சி முகாமில் மத்திய குழு ஆய்வு செய்தது. ஆழ்வார்பேட்டையில் அமுதம் கூட்டுறவு அங்காடியில் மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் குறித்து ஊழியர்களிடம் மத்திய குழு கேட்டறிந்தது .

தண்டையார்பேட்டை மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து நலம் விசாரித்தனர். இதனை தொடர்ந்து ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறை குறித்தும் மத்திய குழுவினர் கேட்டறிந்தனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1755 ஆக உயர்ந்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 52 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 452 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |