கடலூர் மாவட்டத்தில் நாளை ஒருநாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார். நகரம், கிராமம் என அனைத்து இடங்களிலும் அனைத்து கடைகளையும் மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நாளை மாவட்டம் முழுவதும் போர்க்கால அடிப்படையில் கிருமிநாசினி தெளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக சேலம், திருச்சி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல, சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு தரப்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளில் ஏப்.26ம் தேதி காலை முதல் 29ம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
சேலம், திருப்பூரில் 26ம் தேதி காலை முதல் 28ம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் முழு ஊரடங்கு காலத்தில் மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவத்துறை சார்ந்த பணிகள் மட்டும் நடைபெறும். அம்மா உணவகங்கள், ஏடிஎம்கள் வழக்கம் போல செயல்படும். கோயம்பேடு போன்ற மொத்த காய்கறி சந்தைகள் விதிமுறைகளின் படி செயல்படும்.
முழு ஊரடங்கு காலத்தில் காய்கறி, பழங்கள் போன்றவற்றை விற்பனை செய்ய நடமாடும் கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பழங்கள்,காய்கறிகள் போன்ற அத்தியாவசிய கடைகளை மூட அனைத்து மாநகராட்சிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று இரவு செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் முழுவதும் நாளை காலை 6 மணி முதல் 29ம் தேதி இரவு 9 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் நாளை ஒரு நாள் மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். பொற்கால அடிப்படையில் கிருமி நாசினி தெளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலூரில் வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க வெளியே வரலாம் என உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், நாளை மருந்து கடைகள் தவிர அனைத்து கடைகளையும் அடைக்க நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் யாரும் நாளை வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் மீறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.