சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளில் ஏப்.26ம் தேதி காலை முதல் 29ம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த 3 மாநகராட்சிகளில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக, சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் ஆகிய மாநகராட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சேலம், திருப்பூரில் 26ம் தேதி காலை முதல் 28ம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு அமல்படுத்துதப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் கடுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாடடில் கொரோனா நோய் தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்தாலும், தற்போதைய நிலை குறித்து இன்று ஆய்வு செய்யப்பட்டது.
கிராம புறங்களில் இந்த நோய் தொற்று ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்த போதிலும், மக்கள் நெருக்கம் மிகுந்த நகர புறங்களில் இந்த நோய் தோற்று தொடர் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இது குறித்து மருத்துவ மற்றும் பொது சுகாதார வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அதில், நகர் புறங்களில் ஊரடங்கை மேலும் கடுமையாக்கினால் மட்டுமே இந்த நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும் என கருத்து தெரிவிக்கப்பட்டது.
அதனடிப்படையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில், சென்னை, கோவை, திருப்பூர், சேலம், மதுரை ஆகிய மாநகராட்சிகளில் தற்போது உள்ள கட்டுப்பாடு மேலும் கடுமையாக்கப்படும் என தெரிவித்துள்ளார். அதன்படி, முழு ஊரடங்கு முறைகள் இந்த மாநகராட்சிகளில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த 5 மாநகராட்சிகளை தவிர பிற இடங்களில் தற்போதுள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு காலங்களில் கடைகளும் அடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு காலத்தில் ஐடி நிறுவன பணியாளர்கள் வீட்டில் இருந்து பணியாற்றலாம் எனவும், மக்கள் காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.