கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் www.meengal.com என்ற இணையதளம் மூலம் பொதுமக்கள் மீன்களை ஆர்டர் செய்துக் கொள்ளலாம் என தமிழ்நாடு மீன் வளர்ச்சித் கழகம் அறிவித்துள்ளது.
மேலும் மீன்கள் என்ற செயலி வழியாக பொதுமக்கள் தரமான மீன்களை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அரசு வங்கிகள், பால். காய்கறி, உணவு பொருட்கள் போன்ற அத்தியாவசிய விற்பனை கடைகள் மட்டும் இயங்கி வருகின்றன. ஏப்ரல் 14ம் தேதியோடு இந்த ஊரடங்கு முடிவடையும் தருவாயில், மேலும் 17 நாட்களுக்கு ஊரடங்கை நீட்டிப்பதாக பிரதமர் மோடி செய்தி வெளியிட்டார்.
அதன்படி மே 3ம் தேதிவரை நீடிக்கப்பட்டுள்ள ஊரடங்கு தற்போது 30வது நாளாக அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் அனைத்து அத்தியாவசிய கடைகளும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும் போன்ற உத்தரவுகள் தமிழகத்தில் வெளியிடப்பட்டது. மேலும், வார இறுதியில் இறைச்சி கடைகளில் கோழி, மட்டன், மீன் ஆகிய இறைச்சிகளை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.
இதனால் சமூக விலகல் பல்வேறு இடங்களில் கடைபிடிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தன. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் இறைச்சி கடைகள் மூடப்பட்டன. எனவே மக்கள் இறைச்சி வாங்க முடியாமல் சிரமப்பட்டனர். இந்த நிலையில், மக்கள் இறைச்சிக்காக வெளியே வருவதை தடுக்கும் விதத்தில் தமிழக அரசு ஆன்லைன் மீன் விற்பனையை ஆரம்பித்துள்ளது.