உருளைக்கிழங்கில் ரோஜாச்செடி வைத்து அழகாக, அருமையாக பூத்து குலுங்குவதற்கு சில முறைகளை பற்றி பாக்கலாமா..
கிராமங்களை போன்று நகர்ப்புறங்களில் உள்ள வீடுகளில் தோட்டம் வைத்து வளர்க்கும் அளவிற்கு இட வசதியெல்லாம் இருக்காது. அதனால் மாடியில் தொட்டி செடிகள் தான் வளர்க்கும் நிலை உள்ளது. அதைவிட அப்பார்ட்மெண்ட் வீடுகளில் அது கூட சரிப்பட்டு வராது. நம் வீட்டிலும் ஒரு ரோஜா செடி இருந்து அது கொத்து கொத்தாக பூ பூத்தால் எப்படி இருக்கும். அய்யோ மனதில் வருமே அப்படி ஒரு மகிழ்ச்சி. அப்போ ஒன்னு பண்ணலாமா, உடனே உங்கள் கிச்சனுக்குபோய்…
இரண்டு பெரிய அளவு உருளை கிழங்கு எடுத்து கொள்ளுங்கள். ஏன்னு குழப்பமா இருக்கிறதா.? அட ரோஜா செடி வளர்க்க வேண்டுமல்லவா, அதற்காகத்தான். இதற்கு பூந்தொட்டியோ, மண்ணோ நமக்கு தேவையில்லை. வெறும் உருளை கிழங்கில் ரோஜா செடியின் தண்டை வெட்டி வைத்து அருமையாக வளர்க்கலாம். நீங்கள் எடுத்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கில் ஒரு சிறிய அளவில் ஓட்டை போட்டு கொள்ளுங்கள்.
பின்னர் ரோஜா குச்சியின் நுனி பகுதியை சைடாக சீவி விட்டு உருளைக்கிழங்கில் இருக்கும் ஓட்டைக்குள் சொருகி விடுங்கள். அதன்பிறகு அதை எடுத்து மண்ணிலோ அல்லது பூந்தொட்டிலோ வைத்து மண்ணைப்போட்டு மூடி விடுங்கள். பின்னர் வழக்கம் போல் செடிக்கு நீருற்றுங்கள். மிகவேகமாக செடி செழித்து வளரும். அதிகமான பூக்கள் பூத்து குலுங்கும். இதற்கு ரோஜா செடி தேவையில்லை, ரோஜாவின் குச்சிகள் இருந்தால் கூட போதுமானது.
அதிலேயே அழகாக, அருமையாக செடி வளர்த்து கொள்ளலாம். ரோஜா செடியை சரியான முறையில் பராமரித்து வந்தாலே மட்டுமே கொத்து கொத்தாக பூக்கள் பூத்துக் குலுங்கும். ரோஸ் செடியை விரும்பாத பெண்கள் யார்தான் இப்பூமியில் உண்டு. அனைவரின் மனதையும் வருடும் ரோஜா மலர்களை வளர்க்க ஆர்வமுள்ளதா.? அனைவரது மனம் கவர்ந்த இந்த ரோஜா மலர்களைவளர்ப்பதற்கு ஆர்வமுண்டு.
இருந்தாலும் அதை பற்றிய பராமரிப்பு முறைகளை பற்றி யாருக்கும் முழுமையாக தெரிவதற்கு வாய்ப்பில்லை. ரோஜா இன்று பல வண்ணங்களில் வளர்கின்றன. சிவப்பு, இளஞ்சிவப்பு, மஞ்சள், வெள்ளை நிறங்களில் ரோஜாக்கள் பூத்துக் குலுங்குவதை நாம் பார்த்திருப்போம். நம் வீட்டிலும் இப்படிப் பூத்துக் குலுங்காதா என நம்மில் பலரும் ஏங்குவோம். பொதுவாக ரோஜாக்கள் வீட்டு முற்றத்தில் அழகுத் தாவரமாகவே வளர்ப்போம். வீட்டு முற்றம் இல்லாதவர்கள் தொட்டியில் வைத்து வளர்ப்போம்.
பராமரிப்பிற்கான முறைகளை பற்றி காணலாம்:
ரோஜா செடியின் வேர்ப் பகுதி இறுக்கமாக இல்லாமல் இலேசாக இருக்கும் படி பார்த்துக் கொள்வது நல்லது. காற்றோட்டம் இருப்பது மிக அவசியம். இந்த ரோஜா செடிகள் நன்கு நீரை உறிஞ்சு விடும். போதுமான அளவிற்கு சூரிய ஒளி தேவை. வீட்டில் காய்கறி, இலைக் கழிவுகளை உரமாக போட்டு நீர் ஊற்றலாம். இதை தவிர கடலைப் புண்ணாக்கு, தண்ணீரில் ஊறவைத்து கரைத்து ஊற்றுங்கள் பூக்கள் பெரிதாகப் பூக்கும்.
அதே போன்று எறும்பு மற்றும் பூச்சித் தொல்லைகளைத் தவிர்க்க வேப்பம் புண்ணாக்கு பெரிதும் உதவும். ரோஜா செடி செழிப்பாக வளர நீர்த் தேங்கி நிற்காமல் ஈரப்பதம் இருந்தாலே போதுமானது. ஆண்டுக்கு ஒரு முறை செடியின் மூன்றில் ஒரு பகுதியை வெட்டி விடலாம். ரோஜாத் தோட்டத்தில் காய்ந்த, நோயுற்ற பூச்சி தாக்கப்பட்ட கிளைகள் மற்றும் குறுக்காக வளர்ந்த கிளைகளையும் வெட்டி அப்புறப்படுத்தி விடுங்கள். அப்பொழுதுதான் குப்பைகள் சேருவது தவிர்க்கப்படும்.