Categories
கல்வி மாநில செய்திகள்

1-12ம் வகுப்புக்கான புத்தகங்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

1-12ம் வகுப்புக்கான புத்தகங்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு தேர்வுகள் ஒத்திவைப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை 1 முதல் 9ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு தேர்வு நடந்து முடிந்துள்ள நிலையில் இன்னும் 10ம் வகுப்புக்கு மட்டும் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் அடுத்த கல்வி ஆண்டுக்கு மாணவர்களுக்கான புத்தகங்கள் அச்சிடப்படுவது கடந்த மார்ச் மாதமே தொடங்கியிருக்க வேண்டும்.

ஆனால் கொரோனாவால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக அச்சகங்கள் ஏதும் செயல்படவில்லை. பள்ளிகள் மூடப்பட்ட இந்த சூழலில் அனைத்து வகுப்புகளுக்கும் இ-புத்தகத்தை இணையத்தில் வெளியிட தமிழக அரசு தீவிரம் காட்டி வந்தது. இந்நிலையில், ஊரடங்கு நாட்களை மாணவர்கள் பயனுள்ள வகையில் செலவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ள பள்ளி கல்வித்துறை, இணையதளத்தில் பாடங்களை கற்க பெற்றோர்கள் வழிகாட்டுதல்கள் வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

1 முதல் 12 வகுப்பு வரை உள்ள அனைத்து பாட பிரிவுகளுக்கும் புது புத்தகங்களை டவுன்லோட் செய்து கொள்ள லிங்க்கை பள்ளிக் கல்வித்துறை வழங்கியுள்ளது. https://e-learn.tnschools.gov.in/ என்ற லிங்கில் சென்று புத்தகங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அனைத்து பாடங்களும் வீடியோ வடிவில் உள்ளன. நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களும் இதனை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |