கோவையில் பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கல்லூரி மாணவி மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் தியாகி குமரன் தெருவைச் சேர்ந்தவர் யூசப். இவர் நகை பட்டறை ஒன்றை நடித்து வருகிறார். இவரது மகள் நஸ்ரின், கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். தற்போது கொரோனாவை தடுப்பதற்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இக்காலகட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
அதேபோல நஸ்ரின் விடுமுறை காலங்களில் வீட்டில் இருந்தவாறு, தனது காதலரான கேரள மாநிலம் வடக்கன்சேரியை சேர்ந்த வாலிபர் ஒருவரிடம் தொடர்ந்து போனில் பேசி வந்துள்ளார். இதுகுறித்து பெற்றோர்களுக்கு தெரிய வர, அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன் போனில் பேசக்கூடாது என்றும் கண்டித்தனர். இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர், நேற்று பெற்றோர்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக வெளியே சென்ற சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பின் வீட்டிற்கு திரும்பி வந்து பெற்றோர்கள் பார்க்கும்போது பிணமாக தொங்கியதை கண்டு கதறி அழுதனர். பின் இச்சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட, சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.