கொரோனா தடுப்பு பணியில் உள்ள மருத்துவர்களை தாக்கினால் சிறை தண்டனை வழங்கும் அவசர சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.
கொரோனாவுக்கு எதிராக தடுப்பு மருந்து தற்போது வரை கண்டுபிடிக்காத நிலையில் கொரோனவுக்கு எதிராக மருத்துவர்கள் போராடி வருகின்றனர். ஆனால் நாட்டில் பல்வேறு பகுதிகளில் மருத்துவர்கள் மீது தாக்குதல் சம்பவம் அரங்கேறி வருகிறது. மேலும் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களை அடக்கம் செய்ய எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளது. சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்ட உயிரிழந்த இரண்டு மருத்துவர்கள் உடலை அடக்கம் செய்ய விடமால் தடுத்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதேபோல நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுள்ளது.
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து தேசிய அளவிலான போராட்டம் வாபஸ் பெறுவதாக இந்திய மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு மருத்துவர்களை தாக்கினால் 6-7 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா தடுப்புப்பணியில் உள்ள மருத்துவர்கள், மருத்துவப்பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் கண்டிக்கத்தக்கது. மருத்துவ பணியாளர்கள் மீதான தாக்குதலை பொறுத்து கொள்ள முடியாது என அவர் கூறியுள்ளார். மேலும் மருத்துவ பணியாளார்களை காக்க அவசர சட்டம் கொண்டு வரப்படும். மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ள நிலையில், குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு பின்னர் அவசர சட்டம் செயல்படுத்தப்படும் என அவர் அறிவித்துள்ளார். மேலும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டவர்களை துன்புறுத்தினால் ரூ. 1 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை அபராதம் வசூலிக்கப்படும். நாட்டையும், மக்களையும் பாதுகாக்கும் பணியில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர், அவர்களது வாகனங்களை சேதப்படுத்தினால் சந்தை விலையை விட இருமடங்கு அபராதம் விதிக்கப்படும் என பிரகாஷ் ஜவடேகர் எச்சரித்துள்ளார்.