Categories
மாநில செய்திகள்

எதிர்கால நலன் கருதி தைரியமாக இருங்கள்: உயிரிழந்த மருத்துவர் குடும்பத்திற்கு முதல்வர் ஆறுதல்!

கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவரின் குடும்பத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது ஆறுதலை தெரிவித்துள்ளார். மருத்துவரின் மனைவி மற்றும் மகனிடம் பேசிய முதல்வர் தனது ஆறுதல்களை வழங்கியுள்ளார். தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் மருத்துவர்களின் உடலை அடக்கம் செய்யும்போது தொடர்ச்சியாக எழும் எதிர்ப்பு மருத்துவ சமூகத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

சென்னையில் உள்ள நியூ ஹோப் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநரும் நரம்பியல் நிபுணருமான மருத்துவர் சைமன் ஹெர்குலிஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று சென்னை வானகரத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் உயிரிழந்தார். முறைப்படி அவரது உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள டிபி சத்திரம் கல்லறைத் தோட்டத்தில்தான் அடக்கம்செய்யப்பட வேண்டும்.

ஆனால் அதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து, மருத்துவரின் உடல் அண்ணாநகர் பகுதியில் உள்ள வேலங்காடு இடுகாட்டில் புதைக்க முடிவு செய்யப்பட்டது. அப்போது, திடீரென மர்மநபர்கள் அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களை கல்லால் அடித்து தாக்கத் தொடங்கினர்.

இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளையே ஏற்படுத்தியது. இதற்கு, மருத்துவர் சங்கம் தரப்பில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று மருத்துவரின் குடும்பத்தினருக்கு தொடர்பு கொண்டு தமிழக முதல்வர் ஆறுதல் வழங்கினார். எதிர்கால நலன் கருதி தைரியமாக இருக்கும்படி கேட்டுக்கொண்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |