ஊரடங்கில் வீட்டில் மனைவிகளால் கொடுமைப் படுத்தப்படும் ஆண்களை பாதுகாக்க வேண்டும் என தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் கடிதம் எழுதியுள்ளார்
கொரோனா தொற்று பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் வீட்டிலேயே மக்கள் அடைந்து கிடப்பதால் மனதளவிலும் உடலளவிலும் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். அதில் ஒரு பிரச்சினையை மையமாகக் கொண்டு தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் மற்றும் வழக்கறிஞரான டி அருள்துமிலன் தமிழக முதலமைச்சருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
கடிதத்தில் அவர் கூறியிருந்ததாவது, ஊரடங்கு உத்தரவினால் வீட்டில் அடைத்து இருக்கும் ஆண்களை குடும்ப வன்முறை உடல்ரீதியாக மட்டுமின்றி மனரீதியாகவும் பாதித்து வருகிறது. இதன் காரணமாக அவர்களின் உடல்நிலை மிகவும் மோசமானதாகவே இருக்கின்றது. பெண்களுக்கு ஆதரவாக இருக்கும் சட்டங்களை காட்டி ஆண்களை மனைவிகள் மிரட்டி வருகின்றனர். அடிமைப்படுத்தவும் செய்கின்றனர்.
மேலும் உண்மை நிலை அறியாமல் குடும்ப வன்முறையில் ஈடுபடும் ஆண்களை கைது செய்யப்படுவார்கள் என டிஜிபி ரவி வெளியிட்ட அறிக்கை ஆண்களுக்கு மேலும் வேதனை அளிப்பதாக உள்ளது. பல ஆண்கள் மனதளவில் மனைவிகளால் கொடுமைப் படுத்தப்படுகிறார்கள். நிராயுதபாணியாக குடும்ப வன்முறை தொடர்பாக புகார் எதுவும் கொடுக்க முடியாமல் வெளியில் சொல்ல முடியாமல் பல இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள்.
எனவே கொடுமையான கொரோனா தொற்றை விட குடும்ப வன்முறையால் அதிக அளவில் பாதிக்கப்படும் ஆண்களை பாதுகாக்க வேண்டும். குறைந்தது ஆண்களின் பிரச்சினைகளை தெரிவிக்க ஹெல்ப் லைன் சேவையை உடனடியாக தொடங்குவது குறித்தாவது ஆலோசிக்க வேண்டும். ஆண்களின் பாதுகாப்பிற்காக ஆண்கள் பாதுகாப்பு ஆணையம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.