தமிழகத்தில் ஊரடங்கு தளர்த்தப்படுவது குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை தொடங்கியது.
தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,477 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் சில தொழில்களுக்கு ஊரடங்கில் இருந்து தளர்வு அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவு எடுத்தும் கொள்ளும் அதிகாரத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. ஆனால் ஊரடங்கு நெறிமுறைகள், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் ஊரடங்கு தொடர்பாக தற்போதைய கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசின் வழிகாட்டுதல் தொடர்பாக தமிழக அரசின் குழு ஆலோசனை நடத்தி உள்ளது. சிறப்பு குழுவின் ஆலோசனைகள் முதல்வரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், குழுவின் ஆலோசனைகளை ஆராய்ந்து முதலமைச்சர் பழனிசாமி முடிவெடுக்க உள்ளார் என தகவல் வெளியானது.
இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட 12 குழுவினருடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள நடைமுறை சிக்கல், அத்தியாவசியப் பொருட்களின் தேவை, ஊரடங்கு தளர்வு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து சென்னை தலைமைச்செயலகத்தில் ஆலோசித்து வருகின்றனர். வல்லுநர் குழு தனது பரிந்துரைகளை அரசுக்கு வழங்கி உள்ள நிலையில் அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.