ஊரடங்கில் அடைக்கப்பட்டிருந்த மதுபான கடையை உடைத்து மதுபாட்டில்களை திருடி சென்ற இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு திட்டம் அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து டாஸ்மாக் கடைகளும் மதுபான கடைகளும் நாடு முழுவதும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் புதுச்சேரி மறைமலைஅடிகள் சாலையில் இருக்கும் தனியார் மதுபான கடையை அடையாளம் தெரியாத நபர்கள் உடைத்து மதுபாட்டில்களை திருடி சென்றுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கடையின் உரிமையாளர் கடைக்கு சென்று பார்த்த பொழுது 20,000 ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்கள் திருடு போனது தெரிய வந்துள்ளது. பின்னர் இதுகுறித்து ஓதியம் சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் கடை உரிமையாளர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்ட காவல்துறையினர் அங்கு உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் மதுபாட்டில்களை திருடியது தெரியவந்துள்ளது. பின்னர் கடையை உடைத்து மதுபாட்டில்களை திருடிய குற்றத்திற்கு காவல்துறையினர் அவர்களை கைது செய்து திருடப்பட்ட மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.