பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட உதவி போலீஸ் கமிஷனர் அனில் கோஹ்லி சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.
இதனை லூதியானாவின் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக நாடு முழுவதும் அனைத்து காவல்துறை அதிகாரிகளும் முழு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஒவ்வொரு மாநிலங்களிலும் கொரோனாவால் காவல்துறை அதிகாரிகள் பாதிக்கப்படுவதை நாம் பார்த்துவருகிறோம். இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 13ம் தேதி பஞ்சாப் உதவி போலீஸ் கமிஷனருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அவர் லூதியானாவில் உள்ள எஸ்.பி.எஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மேலும் கடந்த வெள்ளிக்கிழமை அன்று, அவருடன் தொடர்பில் இருந்த அவரது மனைவி, ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி (SHO) மற்றும் அவரது கான்ஸ்டபிள் டிரைவர் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஏசிபி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில், கடந்த 24 மணி நேரத்தில் 16 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 202 ஆக அதிகரித்துள்ளது. அதில் மொத்தம் 27 பேர் தற்போது வரை குணமடைந்துள்ளதாகவும், 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதகாவும் மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.