தினமும் முட்டை எத்தனை சாப்பிடலாம்.? யாரெல்லாம் சாப்பிடலாம்.? யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பது பற்றியே தெரிந்து கொள்வோம்.
பொதுவாக விட்டமின் ஏ,பி,சி,டி,இ என்று உடலுக்கு தேவையான அனைத்து வகையான வைட்டமின்களும் முட்டையில் உண்டு. மேலும் தைராக்சின் சுரக்க தேவையான அயோடின், பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு தேவைப்படும் பாஸ்பரஸ் போன்றவையும் முட்டையில் உண்டு.
உடலுக்கு தேவையான அமினோ அமிலங்களும் முட்டையில் மட்டுமே நிறைவாக இருக்கும். ஒரு முட்டையின் வெள்ளைக்கரு 17 கலோரியும், மஞ்சள் கருவில் 59 கலோரியும் உள்ளது. மேலும் புரோட்டின் வெள்ளைக்கருவில் 3.5 கிராம், மஞ்சள் கருவில் 2.8 கிராமும் உள்ளது. மஞ்சள் கருவில் கொழுப்புச் சத்து மட்டுமே 180 மில்லி கிராம் உள்ளது.
யார் யார் எவ்வளவு முட்டை சாப்பிடலாம்:
பொதுவாக குழந்தைகளுக்கு முதன் முதலாக முட்டை கொடுக்க ஆரம்பிக்கும் பொழுது முதலில் மஞ்சள் கருவை மட்டும் கொடுத்து அது நன்கு செரித்து குழந்தையின் உடலுக்கு தொந்தரவு ஏதும் செய்யவில்லை என்று உறுதிப்படுத்திய பின் வெள்ளைக் கருவையும் சேர்த்து கொடுக்க வேண்டும்.
அதே போன்று ஒரு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் தொடங்கி 40 வயது வரை உள்ளவர்கள் எடை குறைவாக இருக்கும் பட்சத்தில் ஒரு நாளைக்கு இரண்டு முட்டை சாப்பிடலாம். இதே வயது வரும் வரை சராசரி எடை கொண்டவர்கள் தினமும் ஒரு முட்டை சாப்பிடலாம். உடல் பருமனான குழந்தைகள் முதல் தொடங்கி பெரியவர்கள் வரை வாரத்திற்கு இரண்டு அல்லது 3 முட்டை எடுத்துக் கொண்டால் போதுமானது.
அதேபோன்று நாற்பது வயதைக் கடந்தவர்கள் தினமும் முட்டை சாப்பிடுவதை தவிர்த்து, வாரத்தில் 2 அல்லது 3 முட்டை மட்டும் எடுத்துக்கொள்ளவேண்டும். பெண்களைப் பொறுத்தவரையில் முட்டை சாப்பிடுவதால் அதில் உள்ள பயோடின் முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. உடல் எடை அதிகம் உள்ள பெண்கள் மஞ்சள் கருவைத் தவிர்த்து வெள்ளை தோலை மட்டும் சாப்பிடலாம்.
கர்ப்பிணி பெண்கள் நல்ல தரமான முட்டையை பார்த்து வாங்கி சாப்பிடுவது நல்லது. கர்ப்பிணி பெண்கள் முட்டை சாப்பிடுவதால் அதில் உள்ள ஃபோலேட் என்னும் விட்டமின் தாயின் ரத்த விருத்திக்கும், சிசுவின் மூளை வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கின்றது. உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்கள், கடுமையான உடற்பயிற்சி செய்பவர்கள் ஒரு நாளைக்கு முட்டையின் வெள்ளைக் கருவையும்,
இரண்டு மஞ்சள் கருவையும் கொண்ட உணவுகளை சாப்பிடலாம். இதனால் தசைகள் நன்கு வலுப்பெறும். உடல் உழைப்பு அதிகம் இல்லாதவர்கள் நாள் ஒன்றுக்கு ஒன்று என்ற வீதத்தில் சாப்பிட்டாலே போதுமானது. சர்க்கரை நோயாளிகளைப் பொறுத்த வரையில் இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதால், முட்டையின் மஞ்சள் கருவை நீக்கி சாப்பிடுவது நல்லது.
முக்கியமாக பச்சை முட்டைகளில் கிடைக்கும் சத்துகளை முழுமையாக பெற சிறந்த வழி வேகவைத்த முட்டையின் வெள்ளைக்கருவை அதிகமாக சாப்பிடுவது தான். மஞ்சள் கருவில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பதால் இதய நோயாளிகள் உடல் பருமன் உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது. மேலும் டிபி உள்ளவர்கள் நாளொன்றுக்கு இரண்டு முட்டைகளின் வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிட வேண்டும்.