பத்தாம் வகுப்பு மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தேர்வுக்கான பாடங்களை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப அரசு ஏற்பாடுகள் செய்துள்ளது
கொரோனா தொற்று அச்சத்தின் காரணமாக மார்ச் 27ஆம் தேதி ஆரம்பமாக இருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 15ஆம் தேதி அன்று தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனாவின் தாக்கம் குறையாத காரணத்தினால் மக்கள் நல்வாழ்வு துறை கொடுக்கும் விவரங்களின் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகள் அனைத்தும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் இருக்கும் யாரும் வெளியில் வராத நிலையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே பத்தாம் வகுப்பு மாணவர்களின் எதிர்காலம், அவர்களது உயர்கல்வி மற்றும் வேலைக்கு செல்ல பெரிதும் அவசியமான ஒன்று பொதுத்தேர்வு. அதனால் தேர்வினை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.
எனவே தற்போது கிடைத்துள்ள விடுமுறையை பயன்படுத்தி மாணவர்களே தங்களை தேர்வுக்கு தயார் படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் தேர்வு தொடங்கிய பின்னர் அதிக விடுமுறைகள் இல்லாமல் பத்து நாட்களுக்குள் தேர்வை முடிக்கவும் கல்வித்துறை முடிவினை எடுத்துள்ளது. இதனைத்தொடர்ந்து மாணவர்களுக்கு உதவும் வகையில் கல்வித் தொலைக்காட்சி மூலமாக பத்தாம் வகுப்பு பாடங்கள் தயார் செய்யப்பட்டு நாள்தோறும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
மேலும் எளிதில் மாணவர்களை பாடங்கள் சென்றடையும் வகையில் டிடி பொதிகை தொலைக்காட்சி மூலம் நாளை முதல் காலை 10 மணியிலிருந்து 11 மணி வரை பாடங்களை ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இந்த முயற்சியின் மூலம் மாணவர்கள் ஏற்கனவே படித்த பாடங்களை எழுதிப் பார்க்கவும் மீண்டும் ஒருமுறை தங்களை தயார்படுத்திக் கொள்ளவும் முடியும் என்பது கல்வியாளர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.