கடலூரில் போதைக்காக மெத்தனால் குடித்து மூவர் உயிரிழந்த சம்பவத்தில் மெத்தனால் வெளியே சென்றது குறித்து 15 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு தொழிற்சாலைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடலூர் சிப்காட்டில் உள்ள பூச்சிக்கொல்லி மருந்து தொழிற்சாலைக்கு கலால்துறை ஆணையர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
கடலூர் அருகே ஆளப்பக்கத்தில் போதைக்காக மெத்தனால் குடித்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவருக்கு கண்பார்வை பறிபோனது. கடலூர் சிப்காட்டில் உள்ள ராசியான தொழிற்சாலையில் (tagros) பணியாற்றி வந்த குமரேன்சன் என்பவர் ஆலையில் இருந்து ஒரு லிட்டர் மெத்தனால் கொண்டு வந்து அதில் தண்ணீர் கலந்து தனது நண்பர்களான சந்திரகாசி, எழில்வாணன், மாயக் கிருஷ்ணன், சுந்தர்ராஜ் ஆகியோருடன் சேர்ந்து குடித்துள்ளார்.
மெத்தனாலை குடித்ததும் உடல்நிலை மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் நேற்று சிகிச்சைப் பெற்று வந்த சந்திரகாசி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். நெஞ்சு எரிச்சல் காரணமாக மற்ற நால்வரும் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எழில்வாணன், சுந்தர் ராஜ், மாயக் கிருஷ்ணன் ஆகிய மூவரும் கவலைக்கிடமான நிலையில் இருந்தனர். சுந்தர்ராஜ் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு மருத்தவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் சுந்தர் ராஜ், மாயக் கிருஷ்ணன் ஆகியோர் உயிரிழந்தனர். மெத்தனாலை மெத்தனமாக கையாண்டதாக சிப்காட்டில் உள்ள ஆலைக்கு வருவாய் துறையினர் சீல் வைத்துள்ளனர். குமரேசன் தற்போது நல்ல நிலையில் இருந்ததால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், மெத்தனால் வெளியே சென்றது குறித்து 15 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு தொழிற்சாலைக்கு கலால் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.