கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரே ஒரு நபருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்..
இந்தியாவில் கொரோனா வைரஸ் முதலில் கேரளாவில் தான் பாதிப்பை ஏற்படுத்தியது.. அதைத்தொடர்ந்து கொரோனா வைரஸ் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த ஏப்ரல் 14 ஆம் தேதிவரை (21 நாட்கள்) ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.. ஆனால் கொரோனா வைரஸ் தாக்கம் குறையாததால் பல்வேறு மாநில அரசின் வேண்டுகோளின் படி, ஊரடங்கை ஏப்ரல் 3 ஆம் தேதிவரை நீட்டித்து பிரதமர் மோடி நேற்று அறிவித்தார். அதைத்தொடர்ந்து மத்திய அரசு ஊரடங்கு கால வழிகாட்டு நெறிமுறைகளை இன்று வெளியிட்டது.
இந்த நிலையில், கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரே ஒரு நபருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அம்மாநிலத்தில் 387 ஆக அதிகரித்துள்ளது.. மேலும் இதுவரை அங்கு 218 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும் அவர் கூறினார்.. இதனால் கேரள மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.. தொடக்கத்தில் அதிகரித்து கொண்டே சென்ற நிலையில், கடந்த சில நாட்களாகவே கேரளாவில் கொரோனா பாதிப்பு படிப்படியாகவே குறைந்து வருவதால் அம்மாநில மக்கள் புத்துணர்ச்சியில் இருக்கின்றனர்…
முன்னதாக இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,933 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதில், 10,197 பேர் தற்சமயம் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 392ஆக அதிகரித்துள்ள நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 1,344 ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை கூறியது குறிப்பிடத்தக்கது..