நாளை காலை 10.30 மணிக்கு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1242 ஆக உயர்ந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார்.
கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இதுவரை 118 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 14ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் 1.1% ஆக உள்ளது. இதனிடையே தமிழகத்தை 22 மாவட்டங்களில் மத்திய அரசின் ஹாட்ஸ்பாட் மாவட்டங்களாக உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதில், சென்னை, திருச்சி, கோவை, நெல்லை, ஈரோடு, வேலூர், திண்டுக்கல், விழுப்புரம், திருப்பூர், தேனி, நாமக்கல், செங்கல்பட்டு, மதுரை, தூத்துக்குடி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி, கடலூர், திருவள்ளூர், திருவாரூர், சேலம், நாகை உள்ளிட்ட 22 மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில் நாளை காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். காணொலி மூலம் நடைபெற உள்ள இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் பங்கேற்க உள்ளனர்.