மதுரை சித்திரை திருவிழா நடத்துவது தொடர்பாக தமிழக அரசு முடிவு எடுக்கும் என மாவட்ட ஆட்சியர் வினய் கூறியுள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். தமிழ்நாட்டில் புகழ்பெற்ற திருவிழாக்களில் முக்கியமானது மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழா. இந்த ஆண்டு திருவிழா ஏப்ரல் 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 6ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பது. திருவிழா நாட்களில் தினந்தோறும் மீனாட்சி அம்மனும் சுந்தரேஸ்வரரும் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி மாசி வீதியை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பர்.
கற்பக விருக்ஷ் வாகனம், சிம்ம வாகனம், பூத, அன்ன வாகனம், கைலாச பர்வதம், காமதேனு வாகனம், தங்கப்பல்லாக்கு, வேடர் பறிலீலை, தங்கக் குதிரை வாகனம், ரிஷப வாகனம், நந்திகேஷ்வரர், யாழி வாகனத்தில் அம்மனும் அப்பனும் வலம் வருவார்கள். சித்திரை திருவிழா நடைபெறம் பத்து நாட்களும் மதுரை மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களும் விழாக்கோலம் பூண்டு காணப்படும்.
அழகர்மலையில் இருந்து எழுந்தருளி மதுரைக்கு வரும் கள்ளழகருக்கு மே 6ம் தேதி விடிய, விடிய தல்லாகுளத்தில் எதிர்சேவை நடைபெற்று, 7ம் தேதி காலை வைகை ஆற்றில் அழகர் இறங்கும் உற்சவம் நடைபெறும். இந்த திருவிழா உற்சவங்களில் லட்சக்கணக்கில் மக்கள் கூடுவார்கள். இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பரவி வருவதால் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவானது மேலும் நீட்டிக்கவும் வாய்ப்புள்ளது. மதுரையிலும் கொரோனா வைரஸால் 39 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சித்திரை திருவிழா நடக்குமா? இல்லையா? என்ற குழப்பத்தில் மதுரை வாசிகள் உள்ளனர். இந்த நிலையில் சித்திரை திருவிழா குறித்து மீனாட்சி அம்மன் கோவில் இணை ஆணையருடன் மாவட்ட ஆட்சியர் வினய் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சித்திரை திருவிழா நடத்துவது தொடர்பாக தற்போது வரை எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை. மதுரையில் சித்திரை திருவிழா நடத்துவது தொடர்பாக தமிழக அரசு தான் முடிவு எடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.