கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் டெல்லியில் இரண்டாவது நாளாக நில அதிர்வால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா அச்சம் நிலவி வரும் நிலையில் ஏப்., 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் 1,000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் டெல்லியில் நேற்று நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் கிழக்கு டெல்லியை மையமாகக் கொண்டு ஏற்பட்டது. டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான நொய்டா, குர்கான், காசியாபாத், பரிதாபாத், கிரேட்டர் நொய்டா ஆகிய இடங்களில் ரிக்டர் அளவில் 3.5ஆக பதிவாவானது. நில நடுக்கம் அச்சத்தின் காரணமாக 144 தடையை மீறி பொதுமக்கள் பலர் வீடுகளை விட்டு வெளியே வந்து குழுமியதால் பரபரப்பு நிலவியது.
நில அதிர்வை சுட்டிக்காட்டி ட்விட்டரில் டெல்லி முதலமைச்சர் பதிவிட்டார். அதில் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக நம்புகிறேன். மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க பிரார்த்திக்கிறேன் என டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இன்று மதியம் 1.26 மணியளவில் உணரப்பட்ட இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 2.7ஆக பதிவாங்கியுள்ளது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.