கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஏழைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், நாள்தோறும் 5,000 பேருக்கு உணவளிக்க இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உறுதி அளித்துள்ளார். அப்நாலாயா என்ற தன்னார்வ அமைப்பு இந்த தகவலை ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. அதில், எங்களது அமைப்பின் மூலம் ஏழை எளிய மக்களின் உணவு செலவை ஏற்றதற்காக சச்சின் டெண்டுல்கருக்கு நன்றி தெரிவித்தது.
மேலும் ஒரு மாதத்திற்கு நாள்தோறும் 5,000 பேருக்கு உணவளிக்க சச்சின் டெண்டுல்கர் முன் வந்துள்ளார்” என்ற தகவலையும் உறுதி செய்துள்ளது. இதற்கு ட்விட்டரில் பதிலளித்திருக்கும் சச்சின் டெண்டுல்கர் ஏழை, எளிய மக்களின் நலனுக்காக பாடுபடும் அப்நாலாயா அமைப்பிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாகவும், அவர்களது சேவை தொடர வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் மக்களுக்கு பல்வேறு தன்னார்வ தொண்டு அமைப்புகள் உதவி வழங்கி வருகின்றனர். இந்த நிலையில், சச்சினின் இந்த உதவி பெருமளவில் பாராட்டை பெற்று வருகிறது.