கொரோனா நலநிதி திரட்ட இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடத்த அக்தர் கேட்டதற்கு போட்டி நடத்த வேண்டிய அவசியமில்லை என கபில்தேவ் பதிலளித்துள்ளார்
கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்து மக்களுக்கு உதவுவதற்காக நலநிதி திரட்ட மூன்று போட்டி கொண்ட கிரிக்கெட் தொடர் இந்தியா பாகிஸ்தான் இடையே நடத்தப்பட வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் அக்தர் தெரிவித்ததை தொடர்ந்து அதற்கு பதில் அளித்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறியதாவது “அத்தர் அவரது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் நம்மைப் பொருத்தவரை பணம் திரட்ட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. பணம் போதுமான அளவு இருக்கிறது.
தற்போதுள்ள நிலையை சமாளிக்க அரசுத்துறைகள் எந்த அளவிற்கு ஒருங்கிணைந்து செயல்படுகிறது என்பதுதான் அவசியமாகும். நமது அரசியல்வாதிகள் பலி சுமத்தும் ஆட்டத்தில் ஈடுபட்டு வருவதை டெலிவிஷனில் பார்க்க முடிகிறது. இதனை நிறுத்த வேண்டியது முக்கியமான ஒன்றாகும். கொரோனா நிவாரண பணிக்கு கிரிக்கெட் வாரியம் ரூபாய் 51 கோடி வழங்கியுள்ளது. தேவையானால் இன்னும் அதிக தொகையை நன்கொடையாக கொடுக்க தயாராக உள்ளது. அதற்காக நிதி ஏதும் திரட்ட வேண்டிய அவசியம் இல்லை.
இந்த இக்கட்டான சூழ்நிலை சகஜ நிலை திரும்புவது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. இதுபோன்ற நேரத்தில் கிரிக்கெட் நடத்துவது வீரர்களை இக்கட்டான நிலைக்கு தள்ளுவது போன்றதாகும். அதை செய்ய வேண்டிய தேவையும் ஏற்படவில்லை. அவ்வாறு போட்டி நடத்தினால் எவ்வளவு பணம் திரட்ட முடியும், என்னை பொருத்தவரை ஆறுமாதங்களுக்கு கிரிக்கெட் போட்டி குறித்து நினைக்கக்கூட முடியாது.
கொரோனாவுக்கு எதிராக போராடிவரும் மருத்துவமனை ஊழியர்கள் காவல்துறையினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களின் நலனில் முதலில் அக்கறை செலுத்த வேண்டும். மற்றவர்களுக்கு உதவுவது நமது கலாச்சாரமாகும் மற்ற நாடுகளுக்கு நாம் உதவி செய்வதை நினைத்து பெருமைப்படுகிறேன். உதவி செய்துவிட்டு அதற்கான பலனை எதிர்பார்ப்பது தவறு. மற்றவர்களுக்கு மேலும் மேலும் கொடுக்கக்கூடிய நாடாகவே நாம் இருக்க முயலவேண்டும்.
சிறிய அறையில் 27 ஆண்டுகள் நெல்சன்மண்டேலா சிறைச்சாலையில் இருந்தார் அதனுடன் ஒப்பிடும் பொழுது நாம் வீட்டில் நல்ல நிலையில் தான் உள்ளோம் இந்த தருணத்தில் உயிரை விட பெரியது எதுவுமில்லை உயிரை காக்க வேண்டியதே அவசியம்” இவ்வாறு கபில்தேவ் கூறினார்.