10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை மே மாதம் இறுதியில் நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவ தொடங்கியதையடுத்து, அனைத்து கல்வி நிறுவனங்களையும் அரசு காலவரையின்றி மூடியது. இதில் குறிப்பாக மார்ச் 27 ஆம் தேதி நடைபெற இருந்த 10 வகுப்பு பொதுத் தேர்வும் ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இதனால் ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு பிறகு தேர்வு எப்போது நடைபெறும் என்றும், தேர்வு நடக்குமா? நடக்காதா? என்றும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே குழப்பமான சூழல் நிலவுகிறது.
இதனிடையே ஊரடங்கு உத்தரவு மேலும் நீடிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. இதையடுத்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது குறித்து மாண்புமிகு முதல்வர் அவர்கள் தான் முடிவு மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். இந்நிலையில் மே 20ஆம் தேதிக்கு பின்னர் 10 ஆம் வகுப்பு பொது தேர்வை நடத்த பள்ளி கல்வித்துறை ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.