மத்திய பிரதேசம் போபாலை சேர்ந்த மூத்த காவல்துறை அதிகாரிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அப்பகுதி காவல்துறை அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். போபாலில் இன்று மட்டும் 13 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியாகியுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 268 ஆக அதிகரித்துள்ளது. இன்று புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 5 பேர் சுகாதாரத்துறை ஊழியர்கள், 8 பேர் காவல்துறை அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என போபாலின் தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி டாக்டர் சுதிர் குமார் டெஹாரியா தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தலைநகர் போபாலில் மட்டும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது. அதில் இரண்டு பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். மாநிலத்தில் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ள 268 பேரில், இந்தூர் மாவட்டத்தில் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு மொத்தம் 151 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய பிரதேசத்தில் இதுவரை 18 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்தூரைச் சேர்ந்த 13 பேர், உஜ்ஜைனியைச் சேர்ந்த இருவர் மற்றும் கார்கோன், சிந்த்வாரா, போபால் ஆகிய பகுதிகளில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர். போபாலில் காவல்துறையினரைத் தாக்கியதற்காக 5 பேர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (என்எஸ்ஏ) கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.