கொரோனா பாதிப்புடன் தாய்லாந்தில் இருந்து மதப்பிரச்சாரத்திற்காக ஈரோடு வந்த 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் 21ம் தேதி தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர்கள் ஈரோடு வந்துள்ளனர். அவர்கள் ஈரோடு சுல்தான்பேட்டை பள்ளிவாசலில் தங்கி, அங்கிருக்கும் மக்களிடம் மதபோதனையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது.
இதையடுத்து அவர்களுக்கு ஈரோடு ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டது. இது தொடர்பாக மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆய்வு நடத்தினர். இந்த நிலையில், அவர்களுக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், அவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உட்பட 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
முதலில் 3 பேருக்கு இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், மேலும் இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அடுத்தடுத்து, பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக இவர்கள் டெல்லியில் இருந்து திரும்பியவர்கள் என்பது தெரியவந்தது. இந்த நிலையில், ஈரோட்டில் இவர்களால் மட்டும் 27 பேர் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், தாய்லாந்தில் இருந்து ஈரோட்டுக்கு வந்தவர்கள் மூலமாக தான் முதல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, இவர்கள் மீது பாஸ்போர்ட் விதிமீறல், நோய்களை பரப்புதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் ஈரோடு சூரம்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.