கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மக்களை கொன்று குவித்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. ஏழை, பணக்காரர் என்று பாரபட்சம் காட்டாமல் கொரோனா பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. இதனிடையே இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இதையடுத்து அவர் 10 நாட்களாக தமது இல்லத்தில் தனிமைப் படுத்திக் கொண்ட நிலையில் சில நாட்களுக்கு முன்பு வீடியோ வெளியிட்டார். அதில், தமக்கு காய்ச்சல் போகவில்லை என்றும், அதனால் தான் இன்னும் பல நாட்கள் தனிமை வாசத்தைத் தொடர இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் மருத்துவரின் ஆலோசனைப்படி பிரதமர் போரிஸ் ஜான்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் அவருக்கு அவசர நிலை ஏதுமில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்தில் இதுவரை கொரோனா வைரசால் 47,806 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4,934 பேர் பலியாகியுள்ள நிலையில் 135 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.