ஊரடங்கு உத்தரவை மீறி தனது ஆண் நண்பருடன் காரை ஓட்டிச் சென்று கன்னட நடிகை ஷர்மிளா மந்த்ரே (Sharmila Mandre) விபத்தில் சிக்கியது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னடத்தில் கடந்த 2007-ஆம் ஆண்டு வெளியான ‘சஜ்னி’ திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஷர்மிளா மந்த்ரே. அதைத்தொடர்ந்து இவர் 20-க்கும் மேற்பட்ட கன்னட படங்களில் நடித்தார். இவர் தமிழிலும் ‘மிரட்டல்’ படம் மூலம் எண்ட்ரி கொடுத்தார்.

இந்தநிலையில், தான் ஷர்மிளா சனிக்கிழமை அதிகாலை ஆண் நண்பர் லோகேஷுடன் தனது சொகுசு காரான ஜாகுவாரில், ஊரடங்கு உத்தரவையும் மீறி வெளியே சென்றுள்ளார். பெங்களூரு வசந்த் நகர் ரயில்வே பாலத்தில், கார் வேகமாக சென்றபோது எதிர்பாராதவிதமாக, நிலை தடுமாறி வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரின் முன்பக்கம் சின்னாபின்னமாக நொறுங்கியது.
இந்த விபத்தில் ஷர்மிளாவின் முகம் மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது. அதேபோல அவரது ஆண் நண்பருக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து படுகாயமடைந்த அவர்கள் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரசை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவையும் மீறி ஷர்மிளா ஆண் நண்பருடன் காரில் ஊர் சுற்றி விபத்தில் சிக்கியது அவரது ரசிகர்களிடையே மிகுந்த கோபத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.