Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் தடையை மீறி மது விற்பனை… ஹோட்டல் உரிமையாளர் உட்பட இருவர் கைது!

தூத்துக்குடியில் ஊரடங்கு தடை உத்தரவை மீறி சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த ஹோட்டல் உரிமையாளர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே திறந்திருக்கிறது. மற்ற அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டு கிடக்கின்றன. அதேபோல தமிழகம் முழுவதுமுள்ள மதுபான கடைகளும் மூடப்பட்டுள்ளன.

இந்தநிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆங்காங்கே சில இடங்களில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக தூத்துக்குடி மாவட்ட காவல் துறைக்கு புகார்கள் குவிந்த வண்ணம் இருந்தது. அதன்படி நேற்று இரவு தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே இருக்கும் பிரபல தனியார் ஹோட்டலில் மதுபாட்டில்கள் சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் மத்திய பாகம் காவல் ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ் தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து ஹோட்டல் உரிமையாளர் சந்திரன், ஹோட்டல் மேலாளர் சன்னாசி முத்து ஆகிய இருவர் மீதும் மத்திய பாகம் உதவி காவல் ஆய்வாளர் சங்கர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்.

அதைத்தொடர்ந்து உணவகத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 744 மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் பல உயர்ரக மது வகைகளும் அடங்கும். மொத்தம் பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து பாட்டில்களின் மதிப்பு 1 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Categories

Tech |