ஆட்டோ, டாக்ஸி, இ-ரிக்ஷா, ஆர்.டி.வி மற்றும் கிராமின் சேவா ஓட்டுநர்கள் மற்றும் பொது சேவை வாகனங்கள் செல்லும் அனைவரின் கணக்குகளிலும் தலா ரூ.5000 செலுத்தப்படும் என டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். மேலும் ஒரு வாரத்தில் இருந்து 10 நாட்களுக்குள் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என கூறியுள்ளார். தற்போது, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,000 நெருங்கியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்புக்கு 50 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 131 உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நாடு முழுவதும் 144 தடை அமல்படுத்தப்பட்டு இன்று 9வது நாளாக அமலில் உள்ளது. இதன் காரணமாக பல்வேறு சிறு, குறு தொழில்கள் முடக்கப்பட்டுள்ளன. தினசரி கூலித் தொழிலார்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சுயதொழிலில் நடத்தி வந்தவர்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள அறிவிப்பால் மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆட்டோ,ரிக்ஷா உள்ளிட்ட வாகன ஓட்டுனர்களுக்கு ரூ.5000 வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். தற்போது வரை, டெல்லியில் 219 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் மார்கஸ் நிஜாமுதீனைச் சேர்ந்த 108 பேர் எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார். மார்கஸ் நிஜாமுதீனைச் சேர்ந்த 2 பேர் உட்பட மொத்தம் 4 பேர் இறந்துள்ளதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.