பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், மதுரை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக 540 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார். இதன் காரணமாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை விருதுநகர் எம்.பி மாணிக்க தாகூர், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.
வெங்கடேசன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின்போது மதுர எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடம் காலி இடமாகவே இருந்தது. இதனால் 95 சதவீதம் நிறைவடைந்த மதுரை எய்ம்ஸ் எங்கே என்ற பாதகையை கையில் ஏந்தியபடி பார்வையிட்டனர். இது தொடர்பாக மதுரை எம்பி சு. வெங்கடேசன் கூறியதாவது, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக கடந்த 2021-ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒதுக்கப்பட்ட 1200 கோடி ரூபாய் நிதி 1970 கோடியாக உயர்த்தப்பட்டது.
கூடுதலாக ஒதுக்கப்பட்ட 700 கோடி ரூபாய் நிதிக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய 100 கோடி ரூபாய்க்கு மத்திய அமைச்சரவை இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை. இதன் காரணமாகத்தான் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான ஒப்பந்தத்தை விட முடியாத நிலை இருக்கிறது. எனவே உயர்த்தப்பட்ட நிதிக்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை விரைவில் வழங்க வேண்டும். அதன் பிறகு மதுரை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கப் படாத நிலையில் 540 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பாஜக தேசிய தலைவர் கூறியுள்ளார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக ஒரு பொய்யை கூறிய நிலையில், மதுரை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக இன்னொரு பொய்யையும் ஜே.பி நட்டா கூறியுள்ளார். இந்த தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதற்கான அரசாணையை பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட வேண்டும்.
தமிழக மக்களையும் மதுரை மக்களையும் ஏமாற்றலாம் என பாஜக அரசு நினைக்கிறது. பொய் சொல்வதையே பாஜக முழு நேர வேலையாக செய்து கொண்டிருக்கிறது என்றார். இதனையடுத்து பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா பேசியது பற்றி விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் கூறியதாவது, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்தால் அதற்கான முழு பெருமை ஜப்பானையே சேரும். வடிவேலு ஒரு படத்தில் கிணற்றை க் காணவில்லை என்று கூறியது போன்று 95 சதவீதம் நிறைவடைந்ததாக கூறிய மதுரையை எய்ம்ஸ் மருத்துவமனையை காணவில்லை என்று கூறினார். மேலும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான ஒப்பந்த புள்ளியே போடாத நிலையில் ஜே.பி நட்டா 95% கட்டுமான பணிகள் நிறைவடைந்து உள்ளதாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான மீம்சுகள் வைரலாகி வருகிறது.