இந்தியாவில் சென்ற 2020 ஆம் வருடம் பரவ தொடங்கிய கொரோனா தொற்று காலக்கட்டத்தில் சாதாரண நிறுவனங்கள் முதல் முன்னணி நிறுவனங்கள் வரை தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதியளித்தது. ஏனென்றால் கொரோனா தொற்று வேகமாக பரவும் நேரத்தில் ஊழியர்கள் தினசரி அலுவலகம் வந்து பணிபுரிவதில் பல சிக்கலை எதிர்கொண்டனர். இதன் காரணமாக ஊழியர்களின் நலன் கருதி WFH ஆப்ஷன் வழங்கப்பட்டது. அதன்பின் ஓரளவு கொரோனா பாதிப்புகள் குறைந்து இயல்புநிலை திரும்பியதும், சில நிறுவனங்கள் மீண்டுமாக ஊழியர்களை அலுவலகம் வந்து பணிபுரிய அழைப்புவிடுத்தது.
அத்துடன் ஊழியர்களுக்கு ஹைபிரிட் மாடல் எனும் முறையையும் அறிமுகப்படுத்தியது. ஹைபிரிட் மாடல் எனில் ஒரு நிறுவனத்தின் பாதி ஊழியர்கள் வீட்டிலிருந்தும், மீதம் உள்ள ஊழியர்கள் அலுவலகம் வந்து பணிபுரிவது ஆகும். இந்நிலையில் ஹேச்பி நடத்திய ஆய்வில் 92% ஊழியர்கள் சில நாட்கள் அலுவலகம் வந்து பணிபுரிந்துவிட்டு மீதி நாட்கள் வீட்டில் இருந்து பணிபுரியும் ஹைபிரிட் மாடலை விரும்புவதாக கண்டறியபட்டு இருக்கிறது. இப்போது ஐடி ஊழியர்கள் மத்தியில் நிலவிவரும் மூன் லைட்டிங் பிரச்சனையால் WFH ஊழியர்களை மீண்டுமாக அலுவலகம் வரவழைக்க நிறுவனங்கள் திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.