தமிழ்நாட்டில் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளித்து வரும் நிலையில். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் காணொலி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
சென்னை தலைமை செயலகத்தில் காணொலி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்திய நிலையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் ஏப்.14 வரை ஊரடங்கு உத்தரவு தொடரும் என கூறியுள்ளார்.
மேலும் தமிழகத்தில் காலை 6-9 மணி வரை காய்கறிகள் விற்கலாம், காலை 7-9 காலை உணவு விற்கலாம், மதியம் 12 – 2.30 மணி வரை மதிய உணவு விற்கலாம், மாலை 6-9 மணி வரை இரவு உணவு விற்கலாம், காலை 9-12 மணி வரை மளிகை கடைகள் இயங்கலாம் என கூறியுள்ளார். அனைத்து வகையான கடைகளிலும் மக்கள் 3 அடி இடைவெளிவிட்டு நின்றே பொருட்கள் வாங்க வேண்டும். மளிகை கடைகள் வீடுகளுக்கே சென்று பொருட்கள் வழங்கலாம்.
அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைப்பதை கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட 9 குழுக்கள் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும் தனியார் வங்கிகள், சிறிய நிதி நிறுவனங்கள், சுய உதவிக்குழுக்கள் கடன் வட்டியை வசூலிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். ஊபர், ஸ்விக்கி போன்ற ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்களுக்கு தடை தொடர்கிறது என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.