நடிகர் கிருஷ்ணா மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின், ரஜினி, கமல் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.
தெலுங்கு சினிமா உலகில் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்பட்டவர் நடிகர் கிருஷ்ணா. இவர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை அவரின் உயிர் பிரிந்தது. இவரின் மறைவை தொடர்ந்து சினிமா துறையினர் அரசியல் தலைவர்கள் ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றார்கள்.
இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, மூத்த தெலுங்கு நடிகர் சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா மறைவெய்திய செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். தெலுங்கு சினிமா உலகில் பல புதுமைகளை கொண்டு வந்து முன்னோடியாக திகழ்ந்தவர் கிருஷ்ணா. அவரின் மறைவு இந்திய திரை உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். கிருஷ்ணாவின் மகன் நடிகர் மகேஷ்பாபு மற்றும் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
The demise of Krishna garu is a great loss to the Telugu film industry … working with him in 3 films are memories i will always cherish. My heartfelt condolences to his family …may his soul rest in peace @urstrulyMahesh
— Rajinikanth (@rajinikanth) November 15, 2022
இதுபோல ரஜினிகாந்த் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, நடிகர் கிருஷ்ணாவின் மறைவு தெலுங்கு திரை உலகத்திற்கு மிகப்பெரிய இழப்பாகும். அவருடன் மூன்று திரைப்படங்களில் நடித்த நினைவுகள் எப்போதும் போற்றத்தக்கது. அவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என குறிப்பிட்டு இருக்கின்றார்.
தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரமாகத் திகழ்ந்த கிருஷ்ணா மறைந்துவிட்டார். அவருக்கு என் அஞ்சலி. அன்னை, சகோதரர், தந்தை என அடுத்தடுத்து இழப்புகளைச் சந்தித்து துக்கத்தில் வாடும் தம்பி @urstrulyMahesh துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
— Kamal Haasan (@ikamalhaasan) November 15, 2022
இதுபோல நடிகர் கமல்ஹாசனும் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கலை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்த கிருஷ்ணா மறைந்து விட்டார். அவருக்கு எனது அஞ்சலி. அன்னை, சகோதரர், தந்தை என அடுத்தடுத்து இழப்புகளை சந்தித்து துக்கத்தில் வாடும் தம்பி மகேஷ் பாபுவின் துயரத்தில் பங்கெடுக்கின்றேன் என பதிவிட்டு இருக்கின்றார்.