லைகர் திரைப்படம் தன்னை பக்குவப்பட வைத்திருப்பதாக விஜய் தேவரகொண்டா பேட்டியில் கூறியுள்ளார்.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தேவரகொண்டா பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் லைகர் என்ற திரைப்படத்தில் குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். இந்த படத்தில் அனன்யா பாண்டே ஹீரோயினாக நடிக்க, ரம்யா கிருஷ்ணன் மற்றும் மைக் டைசன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் சென்ற ஆகஸ்ட் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஆனால் இந்தப் படம் தோல்வியை சந்தித்தது.
இந்த நிலையில் பேட்டி ஒன்றில் விஜய் தேவரகொண்டா கூறியுள்ளதாவது, சினிமாவில் வெற்றி தோல்வி சகஜம். ஒவ்வொரு வாழ்க்கையிலும் தவறுகள் நடக்கும். நான் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் சினிமாவிற்குள் நுழைந்து தற்போது பான் இந்தியா திரைப்படங்களில் நடிக்கும் அளவிற்கு வளர்ந்திருக்கின்றேன் என்பது பெரிய விஷயம். லைகர் படத்திற்காக நான் கடுமையாக உழைத்தேன்.
ஆனால் அந்த நம்பிக்கையை படம் தகர்த்தெறிந்தது. வாழ்க்கையில் உயர வேண்டும் என்றால் உழைப்பு மட்டுமல்லாமல் சில வித்தியாசமான முயற்சிகளிலும் ஈடுபட வேண்டும். அப்படி செய்யும் முயற்சிகள் சில முறை வெற்றி பெறும் சில முறை தோல்வியடையும். ஆனால் முயற்சி செய்வது முக்கியமான ஒன்று. லைகர் படம் கூட ஒரு வித்தியாசமான முயற்சிதான். இத்திரைப்படம் தோல்வியடைந்தாலும் ஒரு நடிகனாக எனக்குள் எத்தனையோ மாற்றங்களை உருவாக்கி பக்குவப்பட வைத்திருக்கின்றது என கூறியுள்ளார்.