உர விற்பனையில் 21 லட்சத்து 91 ஆயிரம் கையாடல் செய்த வழக்கில் நாமக்கல்லை சேர்ந்த பட்டதாரி இளைஞரை போலீசார் கைது செய்துள்ளார்கள்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு அருகே இருக்கும் கொக்கராயன்பேட்டையில் செயல்பட்டு வரும் இந்திய உழவர் உர கூட்டுறவு நிறுவனத்தின் கிளையில் நாமக்கலை சேர்ந்த முதுநிலை வேளாண் பட்டதாரி சீனிவாசு சென்ற 2018 ஆம் வருடம் முதல் விற்பனையாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் சென்ற வருடம் மார்ச் மாதம் 15 ஆம் தேதி அவர் திடீரென தனது பணியை ராஜினாமா செய்வதாக தலைமை அலுவலகத்திற்கு ஈமெயிலில் தெரிவித்தார்.
இதனால் சந்தேகம் அடைந்த அலுவலக அதிகாரிகள் அலுவலகத்திற்கு வந்து தணிக்கை மேற்கொண்டார்கள். அப்போது 30 லட்சத்து 3,678க்கு உரம் குறைவாக இருப்பது தெரியவந்தது. மேலும் கரும்பு விவசாயிகள் உரத்தை கடனாக பெற்றுச் சென்றதாகவும் விரைவில் விவசாயிகளிடம் வசூல் செய்து கம்பெனிக்கு பணத்தை திருப்பி செலுத்துவதாகவும் கூறினார்.
ஆனால் கொஞ்சம் பணத்தை மட்டும் அவர் செலுத்தி மீதமிருக்கும் பணத்தை செலுத்தாமல் மோசடி செய்யும் நோக்கில் காலம் தாழ்த்தியதாக கூறப்படுகின்றது. இதனிடையே அந்நிறுவனத்தின் மாநில அலுவலர் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு ஒன்றை கொடுத்தார். அதில் சீனிவாசு உர விற்பனையில் 21 லட்சத்து 91 ஆயிரத்தை கையாடல் செய்ததாகவும் கூறினார். இதனால் போலீசார் வழக்கு பதிவு செய்து சீனிவாசுவை கைது செய்து விசாரணை செய்து வருகின்றார்கள்.