பருவமழை காலத்தில் பயிர்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் குறித்து தோட்டக்கலை துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டத்திலுள்ள வாழை, திராட்சை உள்ளிட்ட பழபெயர்கள் 18,750 ஹெக்டேர் அளவிலும் தக்காளி, மிளகாய், வெண்டைக்காய், வெங்காயம், கத்திரிக்காய் உள்ளிட்ட காய்கறி பயிர்கள் 5700 ஹெக்டேர் அளவிலும் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் வடக்கிழக்கு பருவமழை காலத்தில் பயிர்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்.
இது குறித்து தோட்டக்கலை துறை அதிகாரி கூறியுள்ளதாவது, வாழை பயிர்கள் காற்றுக்கு எளிதில் உடைந்துவிடும் என்பதால் தார் வாழைகள் அதிகம் பாதிப்பை சந்திக்கும். இதற்காக சவுக்கு அல்லது யூகலிப்டஸ் கம்புகளை ஊன்றுகோலாக பயன்படுத்தி மரங்களுக்கு முட்டுக் கொடுக்க வேண்டும்.
75 சதவீதத்திற்கும் மேல் முதிர்ந்தவற்றை அறுவடை செய்திட வேண்டும். திராட்சை கொடியில் போர்டோ கலவை பசையினை பூச வேண்டும். மேலும் கொடிகளை பந்தலில் நன்றாக அமைக்க வேண்டும். மாம்பழம், கொய்யா, எலுமிச்சை உள்ளிட்டவற்றிற்கு காய்ந்த மற்றும் பட்டுப்போன கிளைகளை அகற்ற வேண்டும்.
மரங்களில் எடையை குறைப்பதற்காக கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். நோய் தடுப்பு மருந்துகளை தூர் பகுதியில் நனையும்படி தெளிக்க வேண்டும். மற்ற தோட்ட பயிர்களுக்கு அனைத்து வயல்களிலும் அதிக நீர் தேங்காதவாறு உரிய வடிகால் வசதி செய்ய வேண்டும்.
பசுமை குடில்கள் அமைக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் அவற்றின் அடிபாகத்தை கம்புகளால் இணைக்க வேண்டும். பசுமை குடிலில் கதவுகள் மற்றும் ஜன்னலில் பத்திரமாக மூடி உள்பகுதியில் காற்று புகாமல் பாதுகாக்க வேண்டும். அவற்றின் பக்கத்தில் மரங்கள் இருந்தால் அதன் கிளைகளை கவாத்து செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.