86 விழுக்காடு கொரோனா தொற்றுக் கொண்டவர்கள் எவ்விதமான அறிகுறிகளும் இல்லாதவர்கள் என முதல்வர் பழனிச்சாமி கூறியுள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பழனிச்சாமி தற்போது விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை தமிழகத்தில் தான் அதிகம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த மக்களின் முழு ஒத்துழைப்பு தேவை என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உயிரிழப்போரின் சதவிகிதமும் இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்திலேயே தமிழ்நாட்டில் தான் மிகக்குறைவு என கூறியுள்ளார். மிக முக்கியமாக ஊரடங்கில் அரசு மேற்கொண்டுள்ள அனைத்து நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றால் நோய் பரவலை கட்டுப்படுத்துவது சாத்தியமாகாது என தெரிவித்துள்ளார்.
வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் மக்கள் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். பொதுமக்கள் வெளியில் செல்லும் போது கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், சமூக இடைவெளியை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கங்களை கடைபிடிக்க வேண்டும் என்றும் வெளியுறுத்தியுள்ளார்.
கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு வழிமுறைகளை வகுத்துள்ளது. இது ஒருபுரம் இருக்க சென்னையில் தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த 5 அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு, கண்காணிப்பு பணிகளையும், ஒருங்கிணைக்கும் பணிகளையும் அவர்கள் மேற்கொண்டு வருவதாக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழநாட்டில் 5.50 லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வரக்கூடிய நபர்களுக்கு உரிய பரிசோதனை நடத்தப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக மாநிலத்தின் பொருளாதாரம் மிகவும் பின்தங்கியுள்ள சூழ்நிலையில் அதனை மீட்டெடுக்கவும், மறுகட்டமைப்பு செய்யவும் வல்லுநர்கள் குழு அமைக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டினார்.
மகாத்மா காந்தி ஊரக வலை வாய்ப்பு திட்டத்தில் இதுவரை நிவாரணமாக 123 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா சிறப்பு நிதியாக இதுவரை ரூ.300 கோடி மதிப்பீட்டில் 1 லட்சத்து 40 ஆயிரம் பயனாளிககுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 33,000 தூய்மை பணியாளர்களுக்கு மதிப்பு ஊதியமாக ரூ.2,500 வழங்கப்பட்டுள்ளது. அம்மா உணவகம் மூலம் தினமும் 8 லட்சம் மக்களுக்கு சூடான, சுவையான உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது உள்பட பல்வறு விஷயங்களை குறிப்பிட்டுள்ளார்.