கடந்த 14 நாட்களில் சுமார் 85 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறியுள்ளார்.
இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட அவர் கூறியதாவது, ” கடந்த 24 மணி நேரத்தில் 1396 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது என தெரிவித்தார். இதையடுத்து, மொத்தமாக உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள் எண்ணிக்கை 27,892 ஆக அதிகரித்துள்ளது. அதில் 20,835 பேர் தீவிர மருத்துவ சிகிச்சையில் உள்ளனர் என கூறினார். கடந்த ஒரு நாளில் மட்டும் 381 நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.
இதுவரை மொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,184 ஆக அதிகரித்துள்ளது. மேலும் குணமடைந்தவர்களின் வீதம் 22.17% ஆக உயர்ந்துள்ளது என கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், ” சுமார் 16 மாவட்டங்களில் கடந்த 28 நாட்களாக யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என கூறினார்.
இந்த மாவட்டங்கள் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த பட்டியலில் சேர்க்கப்பட்ட மூன்று புதிய மாவட்டங்கள் மகாராஷ்டிராவின் கோண்டியா, கர்நாடகாவின் தேவங்கேர் மற்றும் பீகாரில் உள்ள லக்கி சராய் ஆகியவை ஆகும்” என லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.