Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பரிசோதனை செய்த 8 பேருக்கு கொரோனா அறிகுறி இல்லை – அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!

தமிழகத்தில் 8 பேருக்குக் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ததில் அவர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சீனாவை அச்சுறுத்தி வந்த கரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனா மட்டுமல்லாமல் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் இத்தாலி, ஈரான், கனடா உள்ளிட்ட பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 4,000க்கும் அதிகமானோர் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 47ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியது. இவருக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவரது உடல்நிலை சீராக இருக்கிறது என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழகத்தில் இதுவரை 70 பேரின் ரத்த மாதிரிகளைப் பரிசோதனை செய்ததில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவருக்கு மட்டும் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது.

இவருடன் தொடர்ப்பில் இருந்த 7 பேர் உட்பட மொத்தம் 8 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருக்கிறதா என ஆய்வு செய்யப்பட்டது. இதுகுறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் தகவல் அளித்த அமைச்சர் விஜயபாஸ்கர் “மகிழ்ச்சியான செய்தி ஒன்றைச் சொல்கிறேன். கொரோனா வைரஸ் இருக்கிறதா என்று பரிசோதிக்கப்பட்ட 8 பேரின் முடிவுகளும் ‘நெகட்டிவ்’ என்று வந்திருக்கிறது.

இதில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த 7 பேரின் பரிசோதனை முடிவுகளும் அடக்கம். இதனால் தமிழகத்தில் புதியதாக கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடுமையான பரிசோதனை நடவடிக்கைகள் தொடர்கின்றன” என பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |