மத்திய அரசின் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் போனஸாக வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பண்டிகை காலம் நெருங்கிக் கொண்டிருப்பதால் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும் என்று நேற்று மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார். நாட்டில் கொரோனாவால் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ள இந்த காலகட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்துள்ளதால் அவர்களின் வாங்கும் திறன் அதிகரிக்கும். இதனால் நாட்டின் பொருளாதாரம் வளரும் என்றும் தெரிவித்திருந்தார்.
மேலும், அடுத்தடுத்து பண்டிகை காலங்கள் வர இருப்பதால் ஒரே தவணையாக போனஸ் வழங்கப்படும் என்றும் பிரகாஷ் ஜவடேகர் கூறி இருந்தார். இந்த நிலையில் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் போனஸாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 11.58 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க ரூபாய் 2080.68 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. ரூபாய் 7000 முதல் 17,951 வரை போனஸ் தொகையாக வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.