இந்தியாவில் 75-வது சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட இருக்கிறது. இதை முன்னிட்டு நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து கல்வியில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிகள் குறித்து சில தகவல்களை பார்க்கலாம். இந்தியா கடந்த 1947-ம் ஆண்டு சுதந்திரம் அடைந்த பிறகு நாட்டில் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் கல்வியை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டது.
இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக இருந்த மவுலானா அபுல் கலாம் ஆசாத் மத்திய அரசின் கீழ் நாடு முழுவதும் ஒரு சீரான கல்விக் கொள்கையை கொண்டு வருவதற்கு திட்டமிட்டார். இந்தியாவில் கல்விக் கொள்கைகளை நவீனமயமாக்குவதற்கான திட்டங்களை வகுப்பதற்காக கடந்த 1948 முதல் 1949-ம் ஆண்டு வரை மத்திய பல்கலைக்கழக கல்வி குழு அமைக்கப்பட்டது. அதன் பிறகு 1952-53-ல் இடைநிலை கல்வி குழுவும், 1964-66-ல் கோதரி கல்விக் குழுவும் அமைக்கப்பட்டது.
இந்தியாவின் முதல் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேருவால் கல்விக் கொள்கை பற்றிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தொழில்நுட்ப கல்விகள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில் தேசிய கல்விக் கொள்கையும், ராஜீவ் காந்தி ஆட்சி காலத்தில் இரண்டாவது தேசிய கல்விக் கொள்கையும் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த 2019-ம் ஆண்டு கி. கஸ்தூரிரங்கன் தலைமையில் புதிய தேசிய கல்விக் கொள்கைக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டது.
இந்த புதிய கல்விக் கொள்கை திட்டங்களை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசாங்கம் ஈடுபட்டிருந்தாலும் தமிழக அரசு உட்பட பலர் புதிய கல்விக் கொள்கைக்கு கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து கல்வி வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் தான் நாடு வளர்ச்சி பாதையை நோக்கி முன்னேறியது.