காற்று மாசுபாடு காரணமாக நோய்த் தாக்குதலுக்கு ஆளாகி ஆண்டுதோறும் சுமார் 70 லட்சம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில் எதிர்பார்த்ததை விட காற்று மாசுபாடு மிகவும் அபாயகரமானதாக உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. தெற்காசியாவில் குறிப்பாக இந்தியா உலகின் மிகுந்த மாசுபட்ட பகுதிகளில் ஒன்றாக தொடர்ந்து விளங்கி வருகிறது.
உதாரணமாக பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட டெல்லியில் 17 மடங்கும், மும்பையில் 8 மடங்கும், கொல்கத்தாவில் 9 மடங்கும், சென்னையில் 5 மடங்கும் காற்று மாசு அளவு உயர்ந்து காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கக்கூடிய புகைபிடித்தல், ஆரோக்கியமற்ற உணவை உட்கொள்ளுதல் போன்ற பிரச்சனைகளுக்கு நிகராக காற்றின் மாசுபடும் அச்சுறுத்தி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதய நோய்க்கு முக்கிய காரணமாக காற்று மாசுபாடு உள்ளதாகவும், குழந்தைகள் மத்தியில் நுரையீரலின் வளர்ச்சியை குறைத்து ஆஸ்துமாவை அதிகப் படுத்தும் அளவிற்கு இன்னல்களை ஏற்படுத்தக்கூடியது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் நச்சு காற்றின் உமிழ்வை குறைப்பது காற்றின் தரத்தை உயர்த்தும். அதனால் பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறையும் என தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, காற்று மாசுபாடு தொடர்புடைய நோய்களாலும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 70 லட்சம் பேர் தாங்கள் வாழவேண்டிய காலத்துக்கு முன்பே உயிரிழப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.