மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவிற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா கவர்னர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இந்த மசோதாவிற்கு கடந்த 45 நாட்களாக ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை இதற்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா அதை அடிப்படையாகக் கொண்டு மருத்துவப் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவிற்கான அரசாணையை தமிழக அரசு நேற்று வெளியிட்டு உள்ளது. மருத்துவ கலந்தாய்வு தொடங்கப்பட வேண்டிய நிலையிலும் ஆளுநர் இதற்கு ஒப்புதல் அளிக்காத சூழலிலும் தமிழக அரசு இந்த அரசாணை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.