நீலகிரி மாவட்டத்தில் உள்ள நியூஹோப் பகுதியில் கணவனை இழந்த முத்தம்மா(81) என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இவருக்கு 3 மகன்களும், 4 மகள்களும் இருக்கின்றனர். அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். நேற்று முத்தம்மா கூடலூர் ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு சென்று வயதான காலத்தில் பிள்ளைகள் யாரும் கவனிக்காததால் பல்வேறு இன்னல்களை சந்திப்பதாக கண்ணீர் மல்க பொதுமக்களிடம் கூறி அழுதுள்ளார். அப்போது ஆர்.டி.ஓ இல்லாததால் கிராம நிர்வாக அலுவலர் சாம் சுந்தரி, கிராம உதவியாளர் சதீஷ் ஆகியோர் மூதாட்டியிடம் விசாரித்தனர். அப்போது மூதாட்டி கூறியதாவது, நான் ஓவேலி எஸ்டேட்டில் வேலை பார்த்து ஓய்வு பெற்றேன்.
அனைத்து பிள்ளைகளையும் நல்ல நிலைக்கு கொண்டு வந்தேன். ஆனால் வயதான காலத்தில் என்னை கவனிப்பதற்கு யாரும் முன் வரவில்லை. இதனால் நிம்மதியை தேடி ஆர்.டி.ஓ அலுவலகத்தில் தஞ்சம் அடைந்ததாக கூறியுள்ளார். இதுகுறித்து வருவாய்த்துறையினர் கூறியதாவது, பிள்ளைகள் கையெழுத்திட்டால் மட்டுமே காப்பகத்தில் மூதாட்டியை சேர்க்க முடியும் என நிர்வாகிகள் கூறுகின்றனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதுவரை மூதாட்டியை பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.