தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்று கல்லூரிகளை தேர்வு செய்து ஏழு நாட்களுக்குள் கட்டணம் செலுத்தாதவர்களின் இடங்கள் காலியானதாக அறிவிக்கப்படும் என்று புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழகத்தில் பொதுப் பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு வருகின்ற ஆகஸ்ட் 25ஆம் தேதி தொடங்குகின்றது. தமிழகம் முழுவதும் உள்ள 430 கல்லூரிகளில் உள்ள 1.5 லட்சம் இடங்களுக்கு 2 லட்சத்து 10 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இதில் 7.5 விழுக்காடு ஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு 11 ஆயிரம் இடங்கள் உள்ள நிலையில் 22,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடைபெறும் நிலையில் தற்போது அதற்கான புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.அதன்படி கலந்தாய்வில் பங்கேற்று கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்கள் 7 நாட்களுக்குள் கட்டணங்களை செலுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் அமைக்கப்படும் 110 மையங்களில் மாணவர்கள் கட்டணங்களை செலுத்தலாம். ஏழு நாட்களுக்குள் கட்டணத்தை செலுத்தாவிட்டால் அந்த இடம் காலியானதாக அறிவிக்கப்பட்டு கல்லூரிக்காக காத்திருப்பவருக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.